வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

🕔 June 26, 2018

– அஹமட் –

வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது.

‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில் எழுதுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

தினக்குரல் மற்றும் வீரகேசரிப் பத்திரிகைகள் அண்மைக் காலமாக முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதி வருகின்றமை அறிந்ததே. இது தொடர்பாக மேற்படி பத்திரிகைகள் இரண்டுக்கும் எதிராக இலங்கை முஸ்லிம்கள் தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பாரியளவில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் றிசாத் ஏ காதரும், தனது பேஸ்புக் பக்கத்தில் மேற்படி பத்திரிகைகளின் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்பில், கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, விடிவெள்ளி பத்தியிகையில் ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுத, ஊடகவியலாளர் றிசாத் ஏ காதருக்கு வழங்கப்பட்டு வந்த சந்தர்ப்பத்தினை அந்தப் பத்திரிகை மறுத்துள்ளது.

இது குறித்து, ‘உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு, விடிவெள்ளி பத்திரிகை தந்த பரிசு‘ எனும் தலைப்பில், ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதனை இங்கு வழங்குகின்றோம்.

‘அண்மையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சில விடயங்களை தினக்குரல் மற்றும் வீரகேசரி பத்திரிகைகள், தமக்கே உரித்தான வகையில் தலைப்பிட்டு கொதிநிலைப்படுத்தியதை நாமெல்லோரும் அறிந்திருந்தோம்.

குறித்த பத்திரிகைகளின் முஸ்லிம் விரோத  எழுத்துகளுக்கு எதிராக, அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் எனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தேன்.

எனது சமூகத்துக்கு எதிராக மேற்படி பத்திரிகைகள் வெளிப்படுத்திய கருத்தை மறுத்துரைத்து, எனது சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு பரிசு என்ன தெரியுமா? விடிவெள்ளி பத்திரிகையில் தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் 06ம் பக்கத்தில் கட்டுரை எழுதுவதற்கு எனக்கு வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் பறிக்கப்பட்டிருக்கிறது.

எனது சமூகத்துக்கு தினக்குரல் மற்றும் வீரகேசரி போன்ற தேசிய பத்திரிகைள் இழைக்கும் ஊடக அநீதிகளையும், வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வகையில் முஸ்லிம்களை நோவினைப்படுத்தும் வகையில் அந்தப் பத்திரிகைகள் எழுதுவதையும், அந்த சமூகத்தின் அங்கத்தவர் எனும் வகையில் கேள்விக்குட்படுத்தியதை எந்தவகையில் பிழை என்று சொல்லமுயும்.

முஸ்லிம்களுக்கானது எனக் கூறி, ‘விடிவெள்ளி’ என்கிற பெயரில் வீரகேசரி நிறுவனம் வெளியிடும் மேற்படி பத்திரிகையானது, அவர்களின் வியாபார தந்துரோபாயத்துக்கானது என்பதை, இதன் மூலம் அவர்கள் அப்பட்டமாக  நிரூபித்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திலுள்ள அரசியல்வாதிகள், பணபலம் படைத்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் நமது சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சு ஊடக இடைவெளியை நிரப்ப முன்வராத வரை, இந்த கழுத்தறுப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்