சொற்களின் அருவருப்பு

🕔 June 19, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

  • லைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை.
  • உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை.
  • ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும்.
  • சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது.
  • முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை.
  • அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட – வேறெதுவும் இருப்பதில்லை.

‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் வழங்காமல், சில பாடங்களில் சித்தியடைய முடியாது’ என்று, உயர் கல்வியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை பற்றி நாம் அறிவோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் – நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்த தினத்தில்தான், மேற்படி விடயத்தை சபையில் உயர்கல்வி அமைச்சர் தனது உரையின்போது தெரிவித்தார்.

இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் தொடர்ச்சியாக இரண்டு தடவை (06 வருடங்கள்) பதவி வகித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் பல்வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக, அவர் இளைப்பாறிய பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அப்போதைய விரிவுரையாளர் சங்கம், உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமார் 220 பக்கங்களில் பதிவு செய்து, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைத்தது. உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கோப் குழு, லஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு உள்ளிட்ட சுமார் 20 இடங்களுக்கு இந்தக் குற்றச்சாடடுக்களைக் கொண்ட ஆவணப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பல்கலைக்கழக பட்டமளிப்பு நிர்மாணத்தில் முறைகேடு செய்தமை, மாணவர் விடுதிகளுக்கான கட்டில் மெத்தைக் கொள்வனவில் மோசடி செய்தமை, பல்கலைக்கழக நிதியிலிருந்து தனது சொந்த வீட்டுக்கு நீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இஸ்மாயிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த கோப் குழு, அவை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, உபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தனிநபர் ஆணைக்குழுவொன்றினை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்தது. அதனடிப்படையில் அந்த ஆணைக்குழு, மே மாதம் 28ஆம் திகதி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டது.

நாஜிம் வருகை

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவியதாகக் கூறப்படும் சில மோசடி நடவடிக்கைகளுக்கு புதிய உபவேந்தரின் வருகை முற்றுப் புள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஊழல், மோசடிகளற்ற ஒரு நிறுவனமாக மாற்றியமைக்கப் போவதாகத் நாஜிம் தெரிவித்தார்.

இருந்தபோதும், காலப்போக்கில் உபவேந்தர் நாஜிமுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் (ஆசிரியர்) சங்கம் கிளம்பியது. உபவேந்தர் நாஜிம் வெறுமனே தூய்மைவாதம் பேசிக்கொண்டு, பல்கலைக்கழகத்தை வீழ்ச்சியடையச் செய்து கொண்டிருக்கிறார் என்று விரிவுரையாளர் சங்கம் குற்றம் சாட்டியது. மேலும், பல்கலைக்கழக்தின் பதவிகளிலுள்ள சிரேஷ்டமானவர்களைப் புறமொதிக்கி விட்டு, தமக்கு விருப்பமானவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் விதிமுறைகளை மீறி உபவேந்தர் நாஜிம் பொறுப்புக்களையும் பதவிகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகவியலாளர் சந்திப்புக்களைக் கூட்டி விரிவுரையாளர் சங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

ஆனாலும், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து உபவேந்தர் நாஜிம் வாய் திறக்கவில்லை. அவை குறித்து அவரிடம் கருத்துக்களைக் கேட்ட ஊடகவியலாளர்களுக்கும் உரிய பதில்களை அவர் வழங்கவில்லை. இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்ட ஆலோசகராகவும், விளையாட்டுப் பணிப்பாளராகவும் பதவியில் அமர்த்தப்பட்ட, இருவரின் நியமனங்கள் நிறுத்தப்பட்டன. தகுதியற்றவர்களுக்கு உபவேந்தர் நியமனங்களை வழங்குகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக மேற்படி நியமன நிறுத்தங்களை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக் காட்டியது.

அமைச்சரின் ஆச்சரியம்

இப்படி உபவேந்தர் நாஜிமுக்குக்கும் விரிவுரையாளர் சங்கத்துக்கும் இடையில் ஒரு யுத்தம் நடந்து வரும் நிலையில்தான், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த 08ஆம் திகதி காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்தார். அதேதினம் பிற்பகல் நாடாளுமன்றில் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷளூ முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் – ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் என்றும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார்.

மேலும், ‘தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோப் குழு உறுப்பினர்கள் இங்கிருந்தால், அவர்கள் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருப்பார்கள். பல்கலைக்கழகத்தின் நிதியில் முன்னாள் உப வேந்தரின் வீட்டுக்கான நீர்க் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் போன்றவை செலுத்தப்பட்டன. இவ்வாறு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள ஒருவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக நான் ஆச்சரியமடைந்தேன். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இதற்கிடையில்தான், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து. அவர் பதவியேற்றுள்ளார்’ என்றும் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபகஷ தெரிவித்தார்.

பாலியல் லஞ்சம்

இந்த உரையினுடைய நீட்சியின் போதுதான்ளூ ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் வழங்காமல், சில பாடங்களில் சித்தியடைய முடியாது’ எனவும் அமைச்சர் விஜேதாஸ கூறினார்.

உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஒரு சட்டத்தரணிளூ நீதியமைச்சராகவும் இருந்தவர். எனவே, அவர் பேசிய விடயத்தின் பாரதூரம் குறித்து அவர் அறிந்திராமல் இருக்க முடியாது. மேலும், தனது அமைச்சின் கீழுள்ள ஒரு நிறுவனம் குறித்து குற்றச்சாட்டொன்றினை முன்வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு மற்றும் ஒழுக்க விதிமுறைகள் பற்றியும் அமைச்சர் நிச்சயம் தெரிந்துதான் இருப்பார்.
ஆயினும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து மாணவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சரின் அந்த உரை அமைந்திருந்தமை விசனத்துக்குரியதாகும்.

தெருக்களில் அலைந்து திரியும் ஒரு பைத்தியக்காரன், அங்கு கிடக்கும் மலத்தை அள்ளி, போகிற வருகிறவர்கள் மீதெல்லாம் ஏகத்துக்கு வீசுவதுபோல், ஓர் உயர் சபையில் கௌரவத்துக்குரிய ஓர் அமைச்சர் உரையாற்ற முடியாது. நாடாளுமன்ற சபை அமர்வுகள் இப்போதெல்லாம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உரைகள் ஹென்சாட்டில் பதியப்பட்டு, ஆவணமாக்கப்படுகின்றன. இவ்வாறாதொரு நிலையில், ஒரு பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த மாணவியர்களுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில், உயர்கல்வி அமைச்சர் ஆற்றிய பொறுப்பற்ற உரையானது கண்டனங்களுக்குரியதாகும்.

உபவேந்தரின் கையறு நிலை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்பவர்கள், கற்றுக் கொடுப்பவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்பதனால், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் அந்த உரைக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து கடுமையான கண்டனங்கள் கிளம்பின. ஆனால், அரசியல்வாதிகள் எவரும் உயர்கல்வி அமைச்சரின் இந்த உரை குறித்து, எதிர்வினைகள் எதனையும் நாடாளுமன்றத்தினுள் பதிவு செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த மாணவியர்களுக்கும் அபகீர்த்தியினை ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி அமைச்சர் ஆற்றிய உரையினைக் கண்டிக்கும் வகையில், அல்லது ‘பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது’ என்று அமைச்சர் தெரிவித்த கருத்தினை மறுக்கும் வiகியல், அந்தப் பல்கலைக்கழக நிருவாகம் இதுவரையில் ஓர் அறிக்கையினைக் கூட வெளியிடவில்லை என்பதும் கவனத்துக்குரியதமாகும்.

இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறித்து உயர்கல்வி அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கோரி, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு விரிவுரையாளர் சங்கம் கடிதமொன்றினை எழுதியது. ஆனால், பல்கலைக்கழக நிருவாகம் இதுவிடயத்தில் இதுவரையில் ஊமையாகவே இருந்து வருகிறது.

‘தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியமைக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எனும் வகையில் உங்கள் பதில் என்ன’ என்று, உபவேந்தர் நாஜிமிடம் ஊடகமொன்று வினவியபோதுளூ ‘அது அமைச்சர் சொன்ன விடயமாகும். அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது’ என்று அவர் கூறியிருந்தமையும் இங்கு கவனத்துக்குரியதாகும்.

பழைய கதை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சில காலங்களுக்கு முன்னர், மாணவியொருவரிடம் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. குறித்த விரிவுரையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி புகாரளித்தார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். இப்போது, அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிலவேளை, இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டு, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பேசியிருக்கவும் கூடும். அதற்;காக, ‘பாலியல் லஞ்சம்’ என்கிற குற்றச்சாட்டினை பொதுமைப்படுத்திப் பேசியமையினை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எதிர்பாராத மாற்றம்

இவ்வாறாதொரு நிலையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத மாற்றமொன்று நடந்துள்ளதாக அறிய முடிகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நாஜிமின் சேவைக்காலம் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவுக்கு வரவிருந்த நிலையில், நேற்று 18ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆனாலும் புதிய உபவேந்தர் தெரிவு இடம்பெறவில்லை.

விதிமுறைகளின் படி, புதிய உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு, அதற்குரிய நபரைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால், புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 15 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், உபவேந்தர் நாஜிம் மேற்கொண்ட குழறுபடிகள் காரணமாக, அவை அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக விரிவுரையாளர் சங்கம் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், புதிய உபவேந்தர் பதவிக்காக பேராசிரியர் நாஜிம் மீண்டும் விண்ணப்பித்துள்ளார் என அறியமுடிகிறது. எனவே அவர் உபவேந்தராக இருந்து கொண்டு, புதிய உபவேந்தர் தெரிவினை நடத்த முடியாது என்றும், அதனால் உபவேந்தர் பதவியை அவர் தொடரக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், தொடர்புபட்ட பலருக்கும் விரிவுரையாளர் சங்கம் கோரிக்கை விடுத்ததது. உபவேந்தர் நாஜிமுடைய சேவைக்காலம் முடிவடைந்த பின்னர், புதிய உபவேந்தரை தெரிவு செய்யும் வரையில் இடைக்கால உபவேந்தராக நாஜிம் நியமிக்கக்படலாம் என, விரிவுரையாளர் சங்கம் சந்தேகத்தமை காரமாகவே, மேற்படி கோரிக்கையை அந்தச் சங்கம் விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், உபவேந்தராகப் பணியாற்றிய நாஜிமின் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே, அவரின் சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனையடுத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக (இடைக்கால உபவேந்தர் என்றும் கூறலாம்) பேராசிரியை உமா குமாரசாமி நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகிறது. புதிய உபவேந்தர் ஒருவர் தெரிவாகும் வரையில், உமா குமாரசாமி இந்தப் பதவியை வகிப்பார்

வெட்கக்கேடு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் நிலவும் மேற்சொன்ன சண்டைகள் காரணமாக, அந்தப் பல்கலைக்கழகம் தரம் குறைந்து செல்கிறது என்று, அப் பல்கலைக்கழகம் மீது அக்கறையுடையோர் கவலைப்படுகின்றனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த மாணவியர்கள் குறித்தும், உயர்கல்வி அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குக் கூட, இந்த சண்டைகள் காரணமாக உரிய பதிலளிக்க முடியாத நிலைவரம் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்துக்கு ஏற்பட்டுள்ளமை வெட்டக்கேடாகும்.

இரண்டாவது தடவையாகவும் உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுவதன் காரணத்தினால்தான், உயர்கல்வி அமைச்சரின் உரையினைக் கண்டிக்க முடியாத கையறு நிலைக்கு உபவேந்தர் நாஜிம் ஆளாகிப் போனதாகவும் ஒரு விமர்சனம் உள்ளது. அப்படியென்றால், அங்குள்ள மாணவிகளின் மானங்களைக் காப்பாற்றுவதை விடவும், பதவிக் கதிரைகள்தான் சிலருக்குப் பெரிதாகத் தெரிகிறதா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அதிகமான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் மீண்டும் பல்கலைக்கழகம் தொடங்குகிறது. இந்த நிலையில், உயர்கல்வி அமைச்சரின் உரை தொடர்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வினைகளை எதனையும் வெளிப்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். அங்கு ஒரு குற்றம் நடப்பதாக, உயர்கல்வி அமைச்சருக்கு அறியக் கிடைக்குமானால், அதுகுறித்து நிருவாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் பொருத்தமான செயற்பாடாக அமையும்.

அதற்குப் பதிலாக, மலத்தினை அள்ளியெடுத்து – போவோர் வருவோர் மீதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு வீசுகின்ற ஒருவனைப்போல், சொற்களை மலமாக்கி உயர்கல்வி அமைச்சர் ஒருவர், பெண் பிள்ளைகளின் மானத்தின் மீது வீசுவதை சொரணைகளற்றுப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

சொரணையற்ற கூட்டத்திலிருந்தே, அநேமகாக அடிமைகள் உருவாகின்றார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்