ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை

🕔 June 8, 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் நிகழ்வுக்கு அழைப்பின்றிச் சென்ற பலர்,  உள்ளே அனுமதிக்கப்படாமல் அவமானப்பட்டுத் திரும்பிய கதைகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வுநேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மாளிகையின் வெளிப்புறத்தில் – சிறியதொரு இடத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நோன்பாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்கினர்.

ஜனாதிபதியும் வருகை தந்து சில நிமிட நேரங்களே அமர்ந்திருந்தார்.

நோன்பு துறக்கும் நிகழ்வுக்கென வழங்கப்பட்ட அழைப்பிதழை வைத்திருந்தோரே மாளிகைக்குள் செல்ல அநுமதிக்கப்பட்டனர்.

அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத பெரும் கூட்டம் ஒன்று மாளிகைக்கு வெளியே தவம் கிடந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்களுள் பலர்; “எங்களையும் அனுமதியுங்கள் ” என பாதுகாப்பு தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் , ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வு சோபிக்கவில்லை. நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பில் பாரியளவில் குறைபாடுகள் காணப்பட்டன. வேண்டா வெறுப்பாக ஏற்பாட்டாளர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருந்தது போன்று காணப்பட்டது.

ஜனாதிபதியிடமிருந்து முஸ்லிம்களை இன்னும் இன்னும் தூரப்படுத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் சதி செய்வதைப் போன்று – அந்த நிகழ்வு இருந்ததாக, அங்கு பலரும் பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களுக்கு – அவர்களின் ஆதரவாளர்களை அழைத்து வருவதற்காக மேலதிக அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி வன்னி மாவட்ட சு.க. எம்பியான மஸ்தானுக்கு 350 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததாம்.

இதனை கேள்வியுற்ற திருகோணமலை மாவட்ட எம்.பி. அப்துல்லாஹ் மஹ்ரூப் , எனக்கு வெறும் 03 அழைப்பிதழ்கள்தான் தந்தார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டாராம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்