ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

🕔 May 31, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட ஒலுவில் பகுதியில் அரச அதிகாரிகள் சிலர், சட்டத்துக்கு முரணாக அபகரித்துக் கொண்ட, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, மீளக் கையளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும், இன்னும் மீளக் கையளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர் என்று, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில், 06 ஏக்கர் 02 றூட் அளவான காணித்துண்டுகளே இவ்வாறு மோசடியாக அபகரிக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய முன்னாள் உயர் அதிகாரிகள் சிலரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சிலரும் இணைந்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான மேற்படி காணியை பிரித்து அபகரித்துக் கொண்டனர்.

குறித்த காணி ஏக்கரொன்று 60 இலட்சம் ரூபாய் பெறுமதியாகவுள்ள நிலையில், ஏக்கர் ஒன்றுக்காக 01 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்குட்பட்ட தொகையை மட்டும் செலுத்தி, மேற்படி அரசாங்க அதிகாரிகள் – அவற்றினை மோசடியாகக் கையகப்படுத்தியிருந்தனர். அத்துடன், காணியினை உரிமைப்படுத்துவதற்காக, இவர்கள் மோசடி ஆவணங்களைத் தயாரித்தும் வழங்கியிருந்தனர்.

இந்த வகையில் மொத்தமாக 03 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணித்துண்டுகளைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக 07 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை மட்டும் மேற்படி நபர்கள் அரசாங்கத்துக்குச் செலுத்தியுள்ளனர்.

மொத்தமாக 22 பேர் மேற்படி காணித்துண்டுகளை இவ்வாறு மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளனரெனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், குறித்த காணித்துண்டுகளை அபகரித்த சிலர், அவற்றினை ஒலுவில் பிரதேசத்திலுள்ள பொது நிறுவனமொன்றுக்கு கையளித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது, அவர்கள் மேற்படி காணியை அபகரிப்பதற்காக செலவிட்ட பணத்தொகையினை, மேற்படி பொது நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகிறது.

இருந்தபோதிலும், காணியை அபகரித்துக் கொண்ட மேலும் சிலர், இன்னும் அவற்றினை குறித்த பொது நிறுவனத்திடம் மீளக் கையளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரி ஒருவரும் இவ்வாறு காணியை மீளக் கையளிக்காதவர்களில் ஒருவராவார்.

இவ்வாறு காணிகளை திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர் விபரங்கள் விரைவில், உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்