ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

🕔 May 21, 2018
ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.

பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார் எனவும் இருவேறு தகவல்கள் நிலவி வந்தன.

நீர்மூழ்கி கப்பல் மூலம் ஆர்ஜென்டீனாவுக்கு ஹிட்லர் தப்பி சென்று, அங்கிருந்து அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்கு போய் தலைமறைவாகி விட்டார் என்றசர்ச்சையும் உள்ளது.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் மற்றும் 04 நிபுணர்கள் ஆய்வொன்றினை  மேற்கொண்டனர்.

இதன்போது ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹிட்லர் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி பெர்லினில் தற்கொலை செய்துகொண்டார் என்றும், அவர் எங்கும் தப்பி செல்லவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும், ஹிட்லர் ஒரு சைவப்பிரியர் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்