ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

🕔 March 11, 2018

– அஹமட் –

முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் போன்றோரைத் தவிர – வேறு எவரும், ரணில் விக்ரமசிங்கவை நொந்து கொள்ளும் வகையில் வாய் திறக்கவில்லை.

குறிப்பாக, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ‘சீலைக்கு மேலால் சொறியும்’ வகையிலானதாகும். ‘முஸ்லிம்களுக்காக ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் வேண்டும், அப்படிச் செய்வதால் ஆட்சியாளர்கள் தன்னை நொந்து விடவும் கூடாது’ என்கிற மனநிலையோடுதான், இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில், ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்திருந்தன.

கவனத்துக்குரியவர்கள்

ஆனால், பிரதமரை தைரியமற்ற ஒருவர்  என்றும், அமைச்சர் தயாகமகேயின் அழுத்தத்தினாலேயே அவர் அம்பாறைக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களைக் கண்டுகொள்ளவில்லை எனவும் பிரதியமைச்சர் ஹரீஸ் பகிரங்கமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் ஆற்றிய உரையும் கவனத்துக்குரியதாகும். கண்டி மாவட்டத்தில் இப்படியான ஒரு பிரச்சினை நடைபெறலாம் என்று ஏற்கனவே பிரதமரிடமும், பொலிஸ் அதிகாரிகளிடமும் – தான் தெரிவித்திருந்த போதிலும், அங்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தன்னிடம் கூறி, நம்ப வைத்து – ஏமாற்றி விட்டதாக, நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன் நெற்றிப் பொட்டில் அடித்தால் போல்  தெரிவித்திருந்தார்.

மேலும், முஸ்லிம்கள் மீதான தாக்குதலை முன்னின்று நடத்தியதாகக் கூறப்படும் அமித் வீரசிங்க, மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் ஆகியோரை மிகக் கடும் சொற்களால், தனது நாடாளுமன்ற உரையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியம்

இன்னொருபுறம், பொளத்த பீடங்களைச் சேர்ந்த  – மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசி, முஸ்லிம்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள தவறான கற்பிதங்களைக் களைய வேண்டிய கடமையும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

ஆனால், ரஊப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் – சிங்கள மொழியில் நல்ல புலமை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும், இதுவரை அதனை செய்யவில்லை. பௌத்த மகாநாயக்கர்களைச் சந்திக்கும் போதெல்லாம் – கூனிக்குறுகி கும்பிட்டு, அவர்கள் கூறுகின்றதை மட்டும் கேட்டிருந்து வருவதைத்தான் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமாகவும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்று சனிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது நடந்து கொண்டமை குறித்து, இங்கு பதிவு செய்தல் அவசியமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுக்கு இதன்போது அமைச்சர் றிசாட் தெளிவுபடுத்தினார்.

கேள்வி

“இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதல்ல. அப்படியென்றால் இந்த நாட்டில் காவல்துறை இருக்கின்றது. உளவுத்துறை இருக்கின்றது. முஸ்லிம்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஏன் அவர்களை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் முடியாது? அதேபோன்று, மலட்டுத்தன்மையுள்ள மருந்தை உணவுப்பண்டங்களில் முஸ்லிம்கள்  கலந்து கொடுக்கின்றார்கள் என்றால், அவற்றை ஏன் கண்டுபிடிக்க முடியாது” என, இதன்போது மகாநாயக்கர்களிடம் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

சபாநாயாகர் கருஜயசூரிய தலைமையில், நேற்று சனிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து  மகாநாயக்க தேரர்களை தனித்தனியாகச் சந்தித்தனர். இதன்போதே, அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கண்ட விடயங்களை தெளிவுபடப் பேசினார்.

இந்த சந்தர்ப்பத்தில் மகாநாயக்க தேரர்கள்; “வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாட் அழித்து மக்களை குடியேற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது” என தெரிவித்த போது, அமைச்சர், அதற்கும் விளக்கமளித்தார்.

ஐயமும், தெளிவும்

25 வருடங்களுக்கு முன்னர், வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கினர். இதன்போதான், இந்தக் குற்றச்சாட்டு என்மீது சுமத்தப்பட்டது. நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதிதான். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை இனவாத நோக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில்ஆராய்வதற்கு, விசாரணை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். அந்த விசாரணை அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது வெளிப்படுத்தப்படவில்லை. சபாநாயகரிடமும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து, விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் வேண்டியுள்ளோம்.

இனவாதிகள் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி, முஸ்லிம்கள் மீது வீண்பழி போடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை” என்று, அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

பாராட்டு

மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மௌனிகளாக இருந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வருகின்றமையினையே அநேகமாகக் கண்டுள்ளோம். ஆனால், நேற்றைய தினம் வழமைக்கு மாறாக, தனதும், தன்னுடைய சமூகம் சார்பானதுமான நியாயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு அமைச்சர் றிசாட் தெளிவுபடுத்தியமை பாராட்டுக்குரியதாகும்.

பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய விதத்தில் பேசுகின்ற தைரியம், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு வாய்த்திருக்கிறது.

சமூகத்துக்காக தொடர்ந்தும் – அவர் அதனை நிறைவேற்ற வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்