பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

🕔 February 27, 2018

– மப்றூக் –

ம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளை, அங்கிருந்த சிங்களவர்களால் தடுக்கப்பட்டதோடு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார்.

பொலிஸ் அதிகாரிகள் பலரும் அங்கு இருக்கத்தக்கதாகவே, இச்சம்பவம் நடைபெற்றது.

அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அங்குள்ள முஸ்லிம்களின் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டமையினை அடுத்து, சம்பவ இடங்களுக்கு, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் இன்று செவ்வாய்கிழமை காலை சென்றிருந்தனர்.

இதன்போது, பிரதியமைச்சரிடம் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கருத்துக் கேட்டு, அதனை பதிவு செய்ய முயற்சித்தார்.

இச்சந்தர்ப்பத்தில், பிரதியமைச்சரை கருத்துக் கூற விடாமல், அங்கு கூடி நின்ற சிங்களவர்கள் சத்தமிட்டுத் தடுத்ததோடு,  கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சித்தனர்.

மேலும், பிரதியமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர்.

இதேவேளை, பிரதியமைச்சரின் வாகனத்தின் மீது,அங்கிருந்தவர்களில் சிலர் கைகளால் அடித்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்

இந்த சம்பவம் நடைபெற்ற போது, முக்கிய பொலிஸ் உயர் அதிகாரிகள் அங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்