அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

🕔 February 25, 2018

– அஹமட் –

மைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது.

இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சராக ஹரீன் பெணான்டோ, வனவளத்துறை மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக ரவீந்திர சமரவீர, இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சராக பியதாஸ கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாகல ரட்நாயக்காவிடம் இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது. ஜே.சி. அலவத்துவல உள்நாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஹர்ஷ டீ சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறாயினும், இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய அமைச்சுப் பதவிகள் புதிய முகங்களுக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருந்த போதிலும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு – சாகலவிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிடம் சென்றுள்ள போதிலும், செயற்பாட்டு ரீதியில் எந்த மாற்றமும் அந்த அமைச்சில் நடைபெறப் போவதில்லை என பரவலாகக் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய உறவினரான சாகல ரத்நாயக்க, ஏற்கனவே, ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வெறுப்புகளுக்கமைவாகவே, தனது அமைச்சினை நடத்திச் சென்றிருந்ததாக விமர்சனங்கள் உள்ளன.

இந்த நிலையில்தான், குறித்த அமைச்சு இப்போது ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சாதாரண மக்கள் பாசையில் சொன்னால், இன்றைய அமைச்சரவை மாற்றமானது, சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்தான் நிற்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்