அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

🕔 February 21, 2018

– அஹமட் –

ருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி எம்.ஏ. இர்ஷாட் பொறுப்புணர்வற்று பதிலளித்ததோடு, சில கேள்விகளுக்கு கருத்துக் கூறவும் மறுப்புத் தெரிவித்தார்.

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில், பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக, ‘புதிது’ செய்தித்தளத்தில், செய்தியொன்றினை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், குறித்த செய்தி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று பஸ் டிப்போ பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர் பொறுப்புணர்வற்று பதிலளித்ததோடு, சில கேள்விகளுக்கு கருத்துக் கூறவும் மறுப்புத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்காக தாம் விசேட பஸ் சேவையினை வழங்குவதாகவும், அதனால்தான் ஏனைய பஸ்களில் மாணவர்களை அனுமதிப்பதில்லை எனவும், இதன்போது அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான குறிப்பிட்ட பஸ்களில் மாத்திரம்தான் பயணிக்க வேண்டுமெனும் சட்டங்கள் ஏதாவது உள்ளனவா என, நாம் கேட்டபோதே, அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி இர்ஷாத்; “தொலைபேசியில் பதில் வழங்க முடியாது” என மறுப்புத் தெரிவித்தார்.

பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை தமது பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கும் போது, அவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என்பதனாலேயே, அந்த மாணவர்களை குறித்த பஸ்களில் ஏற்றிச் செல்வதற்கு இவர்கள் மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இவ்வாறான கயமைத்தனம் கொன்ட நடவடிக்கை காரணமாக, பருவச் சீட்டுக்கள் மூலம் பயணம் செய்யும் ஏழை மாணவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொருபுறம், ஊடகவியலாளர்களின் தொலைபேசி மூலமான கேள்விகளுக்கு, பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள் பதில் வழங்க முடியாதா என்பதை, இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் மேலதிகாரிகள் அல்லது போக்குவரத்து அமைச்சு அதிகாரிகளிடம் ‘புதிது’ செய்தித்தளம் கேட்டு தெளிவுபெறத் தீர்மானித்துள்ளது.

தொடர்பான செய்தி: பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்