கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி

🕔 February 4, 2018
லுவில் பிரதேசத்தில் தாருஸ்ஸலாம் ஒன்றை இந்த வருடத்தில் நாங்கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கான நிதியைத் திரட்டி, கொழும்பில் இருப்பதுபோல அம்பாறை மாவட்டத்தில் ஒரு தாருஸ்ஸலாமை நிறுவுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சின்னப் பாலமுனையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;

கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாம் விவகாரம் பெரிய பூதாகரமாக்கப்பட்டு, அதில் நாங்கள் சம்பாத்தியம் நடத்துவதுபோல பேசிக்கொண்டு திரிகின்றனர். இப்படி கேவலமாக கதைகளை சொல்லி, மக்களை வேண்டுமென்று திசைதிருப்புகின்ற வேலையைத்தான் இங்குள்ளவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். பொதுச் சொத்தை சூறையாடி ஏப்பம் விடுகின்றவர்களாக கட்சியின் முக்கியஸ்தர்களை காட்டுவதற்கு செய்கின்ற இவர்களது முயற்சி மிகவும் கேவலமானது.

தாருஸ்ஸலாம் விடயங்களுக்கான மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப், லோட்டஸ் என்ற பெயரில் ஒரு நம்பிக்கை நிதியத்தை ஆரம்பித்திருந்தார். பதவி வழியாக அதில் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த காரணத்தினால் நானும் அதில் உள்வாங்கப்பட்டிருந்தேன். தாருஸ்ஸலாம் என்ற சொத்து இந்த நம்பிக்கை நிதியத்துக்கு மாற்றப்பட்டது. தலைவரின் மறைவின் பின்னால் சில விடயங்கள் நடந்தன.

லோட்டஸ் நம்பிக்கை நிதியத்தின் தலைவியாக அஷ்ரஃப் – தனது மனைவி பேரியல் அம்மையாரை நியமித்திருந்தார். அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வழங்கிய ஆலோசனையின் பிரகாரம், முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவராக இருந்தால் மாத்திரமே நம்பிக்கை நிதியத்தின் தலைமைப் பதவியை வகிக்கமுடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையினால் தாருஸ்ஸலாம் தப்பி பிழைத்திருக்கிறது. இல்லாவிட்டால் இது வேறு யாரின் கைகளுக்கோ போயிருக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸின் சொத்துகளை நிர்வகிப்பதற்காக யுனிட்டி பில்டர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. தாருஸ்ஸலாமுக்காக கொள்வனவு செய்த காணியின் உறுதிப்பத்திரம் எழுதும்போது இந்த நிறுவனத்தின் பெயரில் எழுதப்படவில்லை என்பது உண்மை. ஆனால், நாங்கள் அதை இல்லாமல் செய்து, அந்தக் காணியின் உரிமத்தை முழுக்க முழுக்க எங்களுக்கு மாற்றியிருக்கிறோம். தாருஸ்ஸலாம் சொத்துகள் அனைத்தும் இப்போது முஸ்லிம் காங்கிரஸிடமே இருக்கின்றன.

தாருஸ்ஸலாம் மாடிகளை வாடகைக்கு விடமுடியாத நிலைமை இருக்கிறது. நம்பிக்கை நிதியத்தின் தலைவி இல்லை, சிலர் மரணித்துவிட்டார்கள், சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். இப்போது நானும், சல்மானும்தான் இருக்கின்றோம். இதனால் வாடகைக்கு கொடுக்கமுடியால் இருக்கிறது. ஆனால், அதில் இருக்கின்ற இரு நிறுவனங்கள் மாத்திரம் வாடகையை கட்சிக்கு கொடுக்கிறது. இதன்மூலம்தான் தாருஸ்ஸலாம் பராமரிக்கப்படுகிறது. அதற்கான கணக்குளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை கொடுக்குமாறு என்னிடம் சொன்னது பாலமுனை அன்சில்தான். அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவி கொடுக்கவேண்டும், ஆனால், அதை மேடையில் சொல்லத் தேவையில்லை என்றேன். இல்லையில்லை சொல்லுங்கள் என்று அன்சில் வற்புறுத்தினார். அதன் தூரநோக்கம் பின்னர்தான் எனக்குப் புரிந்தது. மாகாணசபை அமைச்சராகவிருந்த நசீருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டால், அடுத்ததாக மாகாண சபையில் அமரலாம் என்ற நப்பாசையினால்தான் அப்படி சொல்லியிருக்கிறார்.

பாலமுனை வைத்தியசாலையை காரணமாக வைத்து சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மீதும், முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் நசீர் மீதும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏனைய வைத்தியசாலைகளை ஒப்பிட்டுப்பார்த்து குறைகூறுகின்றனர். இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தலைவராகிய நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இனி யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து நான் விளக்கமளிக்கும்போது, சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறுவதில்லை என்று கூறியிருந்தேன். இதைக் கேட்ட மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் நாங்களும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்தான். ஆனால், மயில் சின்னத்தில் கேட்கிறோம். சின்னம் மாறினால் பிரச்சினையில்லை என்று தலைவர் சொல்லிவிட்டார். எனவே, மயிலுக்கு வாக்களியுங்கள் என்று பெண்களிடம் சென்று வாக்கு கேட்கின்றனர்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments