நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

🕔 January 12, 2018

ச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும், தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“உச்ச நீதிமன்றத்திடம் நான் கருத்துக் கோரியது, எனக்கு ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கான வருடங்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காகவல்ல. 19வது அரசியலமைப்பு திருத்தத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து சமூகத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்ற காரணத்தினாலாகும்.

நான் ஜனாதிபதிப் பதவியில் நிலைத்திருப்பதற்காக வரவில்லை. எனினும் எனது கனவான தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கும் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடன் வாழுகின்ற, உலகில் அங்கீகரிக்கப்பட்ட தேசமாக இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே உள்ளேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் அப்பதவியில் தொடர்ந்து இருக்கவும் எனக்குப் பின்னர் எனது பிள்ளைகளுக்கு அப்பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் இளம் பிரதிநிதிகளே அந்த தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்.

என்னிடம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது.  என்னிடம் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரலேயாகும். அதன் மூலம் மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளேன்” என்றார்.

Comments