அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

🕔 December 31, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில், தனது ஆதரவாளர்களுடன் நேற்று சனிக்கிழமை இரவு, ஏறாவூரில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாண சபையினை உடனடியாக கலைப்பதற்கான வேண்டுகோளொன்றினை முன்வையுங்கள் என்று, ஒரு சந்தர்ப்பத்தில் ஹாபிஸ் நசீரிடம், மு.கா. தலைவர் உத்தரவிட்டதாகவும்; ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, பதவி ஆசையின் காரணமாக மு.கா. தலைவரின் உத்தரவுக்கு ஹாபிஸ் நசீர் மாறு செய்ததாகவும் அலிசாஹிர் மௌலான சுட்டிக்காட்டினார்.

தனது பதவிக் காலத்தை விடவும், மேலும் இரண்டு வருடங்கள் முதலமைச்சராக இருக்க முடியும் என்கிற பேராசையின் காரணமாகவே, ஹாபிஸ் நசீர் இப்படி நடந்து கொண்டார் என்றும் இதன்போது மௌலானா தெரிவித்தார்.

இதன் காரணமாக, “இன்னும் இரண்டு வருடங்களுக்கு நான்தான் முதலமைசசர். எனது மயிரைக் கூட, யாரும் பிடுங்க முடியாது” என்று ஹாபிஸ் நசீர் சொல்லித் திரிந்ததாவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் கூறினார்.

இருந்தபோதும் இறுதியில் ‘அரசனை நம்பி – புருசனைக் கைவிட்ட நிலை’தான் ஹாபிஸ் நசீருக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானவும், ஹாபிஸ் நசீரும் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என்றபோதும், அவர்கள் இருவருக்கும் இடையிலுள்ள பாரிய பிரச்சினை காரணமாக, ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் ஹாபிஸ் நசீரும், தராசு சின்னத்தில் அலிசாஹிர் மௌலானாவும் தமது அணியினரைக் களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments