மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

🕔 December 10, 2017

– அஹமட் –

மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுவினை சமர்ப்பிப்பதற்கு முன்னர் வழங்க வேண்டும் என்றும், அதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும், அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் தீர்மானம் மேற்கொண்டதோடு, அதனை கட்சித் தலைவரிடம் கோரிக்கையாகவும் முன்வைத்துள்ளனர்.

மேற்படி தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மு.காங்கிரசுக்கு வேட்பாளர்களை வழங்குவதில்லை என்று மத்திய குழுவினர் முடிவு செய்துள்ளதோடு, சுயேட்சையாக தமது வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்குவதற்கும் மத்திய குழு யோசித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய குழுவின் இந்த உறுதியான தீர்மானத்தினை சிதைக்கும் நடவடிக்கைகளில் மு.கா. தலைவர் ஈடுபட்டு வருவதாகவும், மு.காங்கிரசை சேர்ந்த அட்டாளைச்சேனை பிரதேச முக்கிய அரசியல்வாதி மூலம், இந்தச் சதி நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மத்திய குழுவினர் கோருகின்றமை போல் வழங்க முடியாது எனும் முடிவுடன், மு.கா. தலைவர் இருப்பதாகத் தெரியவருகிறது.

எனவே, மத்திய குழுவினர் இதற்கு எதிராகச் செயற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தரிடம் தலைவர் நேரடியாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

குறித்த முக்கியஸ்தரும் அதற்கு சம்மதித்து விட்டார்.

இதற்காக, அட்டாளைச்சேனையின் மேற்படி மு.கா. பிரமுகருக்கு, தேர்தல் செலவுக்கான நிதி எனும் பெயரில், பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்