சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

🕔 October 27, 2017

– யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு, சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமை தாங்கினார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான இப்பேரணி சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவிடம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு வழங்குவதற்காக மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மேற்படி பேரணிக்கு தலைமை தாங்கிய பள்ளிவாசல் தலைவர் ஹனீபா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“எமக்கு  தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை பல்வேறு போராட்டங்களில் குதிப்போம். அவ்வாறு  போராட்டங்களில் குதிக்க நேர்ந்தால் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இங்கு இடமளிக்கப் போவதில்லை.  அரசியல்வாதிகளுக்கு எமதூர் சார்பாக எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்படமாட்டாது. அவர்களும் அரசியல் செயற்பாடுகளை இங்கு மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்