அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

🕔 August 3, 2015
ல் குர்ஆனை கொச்சைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் – பொது பல சேனா அமைப்பினரை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Mujibur Rahman - 095

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ள பொதுபல சேனா அமைப்பின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் – சுசந்த ரன்முத்து குமாரணசிங்க என்பவர், அது குறித்த ஒளிப்பதிவொன்றை சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றார்.

இவ்விடயம் குறித்து சட்டத்தரணிகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, இவ்விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் இதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, இனவாத கருத்துக்களை பரப்பி – நாட்டில் மற்றுமொரு வன்முறையை கட்டவிழ்த்துவிட முற்படும் பொதுபலசேனாவின் பிரச்சார கூட்டங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து, உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் நல்லாட்சியை நோக்கி பயணிக்கின்ற வேளையில், முஸ்லிம்களையும் ஆல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் செயலானது பாரதூரமான விடயமாகும். மேற்படி செயற்பாடானது – சாதாரண பௌத்த மக்களை, இனவாத கருத்துக்களால் தூண்டி, மற்றுமொரு வன்முறைக்கு வழியேற்படுத்தும் முயற்சியாகும்.

முஸ்லிம்கள் தமது உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடுகின்றனர். ஏனைய மதத்தவர்களது உரிமைகளை பறித்துவிட்டு – தாம் மாத்திரம் வாழ வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. அத்துடன், பல்லின சமூகத்தவர்கள் வாழும் இலங்கையில்,  நல்லிணக்கத்துடன் அனைத்து தரப்பினருடன் இணைந்து வாழ்வதற்கு விரும்புகின்றனர்.

மேலும், தீவிரவாதத்தை இஸ்லாம் முழுமையாக எதிர்க்கின்றது. அதற்கு துணை போவதையும் மிகத் தெளிவாக தடுக்கிறது. எனவே, நாட்டிலுள்ள சாதாரண அப்பவிப் பொதுமக்களிடம், முஸ்லிம்கள் பற்றி பிழையான கருத்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகளானது, கடந்த வருடம் ஜூன் மாதம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைபோன்று, மற்றுமொரு வன்முறைக்கு தூண்டி விடக்கூடும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு பூரண உதவிகளை வழங்கியது. அவர்களுக்கு பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என்பதை, பொதுபலசேனா புரிந்துகொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்