நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி

🕔 September 26, 2017

– சுஐப் எம் காசிம் –

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று செவ்வாய்கிழமை மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்திய போதே, அவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஆசாத்சாலி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அடுத்தே இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், மற்றும் பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படாது மூடியிருக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.

காடாகிப் போய்த் தூர்ந்து கிடக்கும் இந்த வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதியின் விஷேட நிதியொதுக்கீட்டில் புனரமைத்து துப்புரவாக்கி கையளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

இந்த வீடமைப்புத் திட்டத்தை வழங்கிய சவூதி நிறுவனத்தின் நிதியுதவியை, தாங்கள் பின்னர் பெற்றுத்தருவதாக முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இந்த வீடமைப்புத் திட்டத்தின் மாதிரிப் பட வரைபை ஜனாதிபதி முதன் முதலில் பார்வையிட்டதுடன் இவ்வாறான நவீன வீடமைப்புத்திட்டம் இவ்வளவு காலமும் மூடிக்கிடந்தமையின் பாதிப்புக்களை தாம் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மௌலவி ஆசிரியர்கள் 174 பேருக்கும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கும் விரைவில் நியமனம் வழங்குவதற்கும் ஜனாதிபதி அந்த சந்திப்பில் உறுதியளித்ததாக ஆசாத்சாலி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீம், ரிஷாட், ஆசாத்சாலி மூவரும் தம்புள்ள பள்ளிவாசல், பாணந்துறை பள்ளிவாசல், மகரம, தெகிவளை பாத்தியா மாவத்த, கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் விடயங்களை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இதனால் முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள வேதனைகளையும் எடுத்துரைத்தனர். இந்த விபரங்களை ஜனாதிபதி அங்குள்ள அதிகாரிகளிடம் கோரியதுடன் அவை தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பள்ளி நிர்மாணம் தொடர்பில் கடந்த அரசாங்க காலத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்று நிரூபம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்களை விபரித்து தற்போது மதங்களுக்கென தனித்தனி அமைச்சுக்கள் இருப்பதால் இந்த சுற்று நிரூபத்தை ரத்துச் செய்யுமாறு வேண்டினர். அத்துடன் இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு அந்த அமைச்சுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதியுடனான் இந்த சந்திப்பு திருப்தியளித்ததாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்