எம்.பி. காய்ச்சல்

🕔 July 28, 2015

Article - 01
வ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன்.

அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில காய்ச்சல்கள், தானாக வந்து – தானாகப் போய்விடும். இன்னும் சில வகைக் காய்ச்சல்கள் – மருந்து கொடுத்தால்தான் சுகப்படும். ஒன்றிரண்டு வகைக் காய்ச்சல்களுக்கு மருந்தேயில்லை.
இது பொதுத் தேர்தல் காலம். அம்பாறை மாவட்டமெங்கும் எம்.பி. காய்ச்சல். அதிலும், முஸ்லிம் பிரதேசங்களில் காய்ச்சலின் சூடு அதிகம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊருக்கும் எம்.பி. வேண்டுமென்கிற அளவுக்கு, காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

குறுகிப் போன மனநிலை

மக்களெல்லோரும் சமூகம் சார்ந்து யோசித்த ஒரு காலமிருந்தது. தமது சமூகத்துக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற பேரார்வம் – அப்போது மக்களிடமிருந்தது. பிறகு, சமூகம் சார் அக்கறை சுருங்கிச் சுருங்கி, இப்போது பிரதேசவாதமாக மாறிப்போய், ‘எங்கள் ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற கோசத்தில் வந்து நிற்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் இந்தக் காய்ச்சலை ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உருவாக்கி விட்ட முஸ்லிம் அரசியல்வாதி யாரென்பதை, சொல்லித் தெரிய வேண்டிய அவசியம், அந்த மாவட்ட மக்களுக்கு இல்லை. அந்த அரசியல்வாதி உருவாக்கி விட்ட காய்ச்சல், இப்போது – அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசமெங்கும் பரவியுள்ளது. இந்த நிலைவரமானது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகம் பெறுவதற்கு, உச்சபட்ச சாத்தியமுள்ள நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையில், மண்ணைத் தூவி விடக்கூடிய அபாயமொன்றினை ஏற்படுத்தி விட்டுள்ளமைதான் கவலையான விடயமாகும்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியினூடாக அதிக முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற முடியும் என்பதை, அரசியல் தெரிந்தவர்கள் அறிவார்கள். சில பிரதேசங்கள் – தலைகீழாக நின்றாலும், நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியாது. காரணம், அவர்களிடமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை போதாது. சில பிரதேசங்கள், குறித்ததொரு கட்சியினை ஆதரிப்பதனூடாகத்தான் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். சில பிரதேசங்கள், வேறுசில பிரதேசங்களின் ஆதரவுடன்தான் தமக்கான நாடாளுமன்ற உறுப்பினரை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவைதான் அங்குள்ள அரசியல், கள நிலைவரங்களாகும்.

ஆனால், ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சல் வந்த பிறகு, மேற்சொன்ன யதார்த்தங்கள் எவற்றினையும் யோசிக்கும் மனநிலையில் அதிகமானோர் இல்லை. அவரவர், தத்தமது பிரதேச வேட்பாளருக்குப் புள்ளடியிட்டு, தமது காய்ச்சலைத் தீர்த்துக்கொள்ளலாமென நினைக்கின்றனர். இந்த நிலைப்பாடானது, கடைசியில் முஸ்லிம் சமூகத்துக்குக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களைத்தான் சிதறடித்து விடப்போகிறது.

முதலில், ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சலிலிருந்து, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் விடுபடுதல் வேண்டும். யதார்த்தம் என்று ஒன்றுள்ளது. அவை, சிலவேளைகளில் நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக் கூடும். அந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, அவற்றினூடாக அரசியற் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற போதுதான், சமூகம் சார்ந்து சில வெற்றிகளை பெற்றுக் கொள்ளலாம்.

அம்பாறை மாவட்டத்தில், இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் மயில் கட்சி, இம் மாவட்டத்தில் புதிதாக வந்து – தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், முஸ்லிம் மக்களின் வாக்குகள் – கட்சிகளுக்கென்றும், வேட்பாளர்களுக்கென்றும் பிரியப் போகின்றன. இப்படி நடந்தால், கடைசியில், குரங்கு அப்பம் பிரித்த கதையில்தான் போய் முடியும்.

உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் பெரும்பான்னை ஆதரவினைப் பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. இந்தக் கட்சி இம்முறை, அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து, யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் 03 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் நினைத்தால், மேற்படி மூன்று வேட்பாளர்களையும் வென்றெடுக்கலாம். சிலவேளை, ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சலில், வாக்குகள் சிதறுமானால், ‘அம்போ’தான்!

2000 ஆம் ஆண்டிலும் – அம்பாறை மாவட்டத்தில் இப்படியொரு தேர்தல் கூட்டணி அமைந்தது. மக்கள் முன்னணியுடன் (People’s Alliance) இணைந்து, மு.காங்கிரஸ் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டது. அப்போதும் மு.கா. சார்பில் 03 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தேர்தலின் இறுதியில் – அம்பாறை மாவட்டத்தில், மக்கள் முன்னணி வெற்றியடைந்து, 04 உறுப்பினர்களைப் பெற்றது. அதில் மூவர் முஸ்லிம்கள், ஒருவர் சிங்களவர். தெரிவான மூவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்களாவர்.

சிலவேளை, மக்கள் முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், அப்போது குறைந்தளவான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தால், முடிவு தலைகீழாக மாறியிருக்கும். முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கும்.

அது அவ்வாறிருக்க, நடைபெறவுள்ள தேர்தலில் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் சிதறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்த நிலைமையினை சரியாகப் புரிந்து கொண்டு, ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சலில் இருந்து விடுபட்ட நிலையில் சிந்தித்தால் மட்டுமே, சமூகம் சார்பான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய முடியும்.

ஆனால், இவற்றையெல்லாம் உள்வாங்கும் நிலையில் கணிசமானோர் இல்லை. ஏனெனில், ஒவ்வொரு பிரதேசமும் தத்தமது நலன் சார்ந்து யோசிப்பதையே, இப்போது அரசியலாகக் கொண்டுள்ளன.

வினை அறுத்தல்

ஆயினும், ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சலை, அம்பாறை மாவட்டத்தில் விதைத்து, பிரதேசவாதத்தினூடாக அதிகாரத்தினைக் கைப்பற்றிக் கொண்டவர்களின் – அரசியல் அந்திம காலமாகவும், இந்தத் தேர்தல் இருக்கக் கூடும். களநிலைவரம் அப்படித்தான் உள்ளது. இதேவேளை, ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற கோசத்தை முன்வைத்து, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினைத் தக்க வைத்துக் கொண்டு வந்தவர்களின் நிலையும் பரிதாபகரமாகவே உள்ளது. இம்முறை ஊருக்கான எம்.பி.யை இழந்து விடுவோமோ என்கிற எண்ணமே, அவர்களுக்குள் – போதைக்கு அடிமையான ஒருவனின் பதட்டத்தை உருவாக்கி விட்டுள்ளது.

இன்னொருபுறம், இந்தக் காய்ச்சலானது, கணிசமானோரிடையே – சமூகம் சார்பாகச் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடித்துள்ளது. சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற அளவுக்கு, இந்தக் காய்ச்சல், பலரின் மூளைகளைப் பாதித்திருக்கிறது.

அம்பாறை மாவட்டத்துக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை 07 ஆகும். இதேவேளை, இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த வகையில் பார்த்தால், இந்த மாவட்டத்தில் அதிகளவான நாடாளுமன்றப் உறுப்பினர்களை முஸ்லிம்கள்தான் பெற்றுக் கொள்தல் வேண்டும். ஆனால், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் அப்போது 37.5 வீதமாகக் காணப்பட்ட சிங்கள சமூகம், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, 44 வீதத்தினைக் கொண்ட முஸ்லிம் சமூகமும், மூன்று பிரதிநிதிகளைத்தான் பெற்றுக் கொண்டது.

இருந்தபோதும், இம்முறை 2010 இல் பெற்றுக் கொண்ட எண்ணிக்கையினையாயினும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டால், அதுவே ஆறுதலான செய்தியாக இருக்கும். நிலைமை அந்தளவு மோசமாகிக் கிடக்கிறது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் – ஒரு பக்கம் கட்சிகளால் பிரிந்தும், இன்னொரு பக்கம் ‘ஊருக்கு எம்.பி. வேண்டும்’ என்கிற காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், இப்படியே தொடர்ந்தும் இருப்பார்களாயின், கடைசியில் அவர்களுக்கு – ஒரு ‘தும்பி’ கூட கிடைக்கப் போவதில்லை!

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்