பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

🕔 July 28, 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ் ஷெரீப், முன்மொழிந்தார் என செய்திகள் கூறுகின்றன.

புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷெஹ்பாஸ் ஷெரீப்; பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையிலேயே பிரதமர் பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளார். இவர், நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரராவார்.

1988 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக தெரிவானமையின் மூலம் அரசியலுக்குள் நுழைந்த ஷெஹ்பாஸ் ஷெரீப், 1951ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும் பஞ்சாப் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

ஷெஹ்பாஸ் ஷெரீப் – திறமை வாய்ந்த ஒரு வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, இடைக்கால பிரமர் ஒருவர் 45 நாட்களுக்கு பதவி வகிப்பார். அதனையடுத்து ஷெஹ்பாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெஹ்பாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் நாடாளுமன்றின் உறுப்பினர் இல்லை என்பதால், அவரை நேரடியாக பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்ய முடியாது என்று கூறப்படுகிறது. எனவே, இடைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்ற பின்னரே, பிரதமர் பதவியை ஷெஹ்பாஸ் ஷெரீப் வகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்