சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

🕔 July 19, 2015

Hakeem - Ninthavoor - 01
– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள் இல்லாமல் அமைவதற்கானதொரு சூழலை உருவாக்கியுள்ளது என, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் தினத்தன்று சனிக்கிழமை, கட்சிச் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் நிந்தவூரிலுள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு, உரையாற்றும்போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

“அம்பாறை மாவட்டத்தில் ஐ.தேசியக் கட்சியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், மு.காங்கிரஸ் சார்பான வேட்பாளர்கள்  நியமிக்கப்பட்டமை தொடர்பில், விமர்சனங்கள் உள்ளமை குறித்து நான் அறிவேன். ஆயினும், அவ்வாறான விமர்சனங்களை புறமொதுக்கி விட்டு, கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை, வெற்றிகரமான முடிவாக ஆக்குவதற்கு எல்லோரும் உழைக்க வேண்டும்.

விநோதமான விமர்சனம்

அம்பாறை மாவட்டத்தில், மு.காங்கிரஸ் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மூவரும் பழைய முகங்கள் என்கிற விமர்சனம் இங்கு முன்வைக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் புது முகங்களை களமிறக்கியிருக்க வேண்டுமென்று, அம்பாறை மாவட்டத்திலுள்ள கட்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. அங்கு புதிய வேட்பாளர்களை நாம் களமிறக்கியிருக்கின்றோம். இருப்பினும், அங்கும் விமர்சனம் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருமே மு.கா.வுக்கு புதிய முகங்கள் என்றும், அவ்வாறு களமிறக்கியிருப்பது சரியல்ல என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். பழையவர்களை களமிறக்கியிருக்க வேண்டும் என்று விமர்சிக்கின்றார்கள்.

ஆக, புதியவர்களை களமிறக்கினாலும் விமர்சிக்கின்றார்கள். பழைய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினாலும் குறை சொல்கிறார்கள். இவை விநோதமான விமர்சனங்களாகும்.

அந்த வகையில், நிலைமையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த முடிவினை எடுத்தாலும், அது குறித்து விமர்சனம் எழுந்து கொண்டுதானிருக்கும்.

எனவே, விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் இப்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு, நமது பிரதிநிதித்துவங்களை வென்றெடுப்பதற்காக, எல்லோரும் பாடுபட வேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று,  மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்வந்து, அங்குள்ள மு.கா. முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இன்று பெருநாள் தொழுகையினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் தொழுதேன்.

மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. அங்குள்ள கட்சி ஆதரவாளர்களிடையே, ஒரு மாதத்துக்கு முன்னர் காணப்பட்ட மனச்சோர்வும், வெற்றி வாய்ப்புக் குறித்த அச்சமும், இப்போது விலகியிருக்கிறது. அவர்கள் இப்போது, வெற்றி மனப்பான்மையோடு உள்ளமையினை அவதானிக்க முடிந்தது.

கட்சியின் வலிமை

மு.காங்கிரசினுடைய வலிமையானது, தேசியப் பட்டியலினால் அடையாளங் காணப்படுவதில்லை. தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் தொகை என்ன என்பதில்தான், நமது கட்சியின் வலிமையினை நிரூபிக்க முடியும்.

மு.காங்கிரசின் பெறுமானமும், மதிப்பும் – எமது கட்சி சார்பாகப் பெறப்படும் வாக்குகளின் எண்ணிக்கையிலும், எமது வேட்பாளர்கள் பெறுகின்ற விருப்பு வாக்குகளிலும்தான் தங்கியுள்ளது. மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்ற மாவட்டங்களில் கட்சியின் வாக்கினையும், ஐ.தே.கட்சியோடு இணைந்து களமிறங்கியுள்ள அம்பாறை போன்ற மாவட்டங்களில் – எமது வேட்பாளர்கள் பெறுகின்ற விருப்பு வாக்குகளையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

சம்மாந்துறைக்கான சாத்தியம்

சம்மாந்துறையானது மிகப் பெரிய வாக்காளர் தொகையினைக் கொண்டதொரு பிராந்தியமாகும். அவர்கள் தமது பிரதேசத்துக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை என்கிற தாகத்தோடு உள்ளனர். அதனைக் கருத்திற் கொண்டு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நாம் களமிறக்கியுள்ளோம். அதாவது, அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியோடு இணைந்து போட்டியிடும் மு.காங்கிரஸானது, தனது சார்பில் 03 வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளது. அந்த மூன்றில் ஒருவரை, சம்மாந்துறைக்கு நாம் வழங்கியுள்ளோம்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசினூடாகத்தான் சம்மாந்துறைப் பிரதேசமானது,  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற முடியும் என்பது யதார்த்தமான விடயமாகும். இந்த யதார்த்தத்தினை சம்மாந்துறைப் பிரதேசம் புறக்கணிக்கணிக்க மாட்டாது என்பது எனது நம்பிக்கையாகும்.

இதேவேளை, சம்மாந்துறையில் நாம் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.ஐ.எம். மன்சூர் – பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தனது மாகாணசபை உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே, சம்மாந்துறைப் பிரதேசமானது, இந்த சூழ்நிலையில் மிகவும் சாதுரியத்துடனும், சாணக்கியத்துடனும் செயற்பட்டு, தமக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தினை சாத்தியமான வகையில் வென்றெடுக்க வேண்டும்.

மு.கா.வின் வகிபாகம்

ஒவ்வொரு பிரதேசமும், தங்களின் பல்வேறு விதமான தேவைகளை, மு.காங்கிரசினூடாக நிறைவு செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். கடந்த காலங்களில் இப் பிரதேசங்களின் விருப்பங்களை எம்மால் முழுமையாக நிறைவேற்ற முடியாததொரு நிலைமை காணப்பட்டது.

ஆனால், தற்போதைய பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள அரசாங்கத்தினூடாக, பல்வேறு பணிகளை மு.காங்கிரஸ் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். அமையவுள்ள அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரசானது – பலம் மிக்கதொரு சக்தியாக இருக்கும். குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை, நாம் இப்போதே வகுத்து வைத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் அரசாங்கத்தில் அவை சாத்தியமாகும்.

கடந்த அரசாங்கத்தில் மு.காங்கிரஸ், ஒரு போடுகாயாக மாத்திரமே இருந்தது. அந்த ஆட்சியில் நாம் ஏன் சேர்ந்தோம், எதற்காகச் சேர்ந்தோம் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், அமையவுள்ள அரசாங்கத்தில் மு.காங்கிரசானது தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கும்.

எனவே, இந்தத் தேர்தலில் மு.காங்கிரசின் வெற்றியினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மூவரும், இணைந்துதான் தேர்தல் வேலைகளில் ஈடுபடுதல் வேண்டும். தனித் தனியாக களமிறங்கி, வேட்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் உள்ளமை போன்றதொரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி விடக்கூடாது” என்றார்Hakeem - Ninthavoor - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்