ஆபத்தான கேள்விகள்

🕔 May 30, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

யற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன.

சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர் உயிரைப் பயணம் வைத்துக் காப்பாற்றினார்கள். அதுபோலவே, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த ராணுவத்தினரை புலிகள் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள்.

ஆனால், இந்த நல்லுறவு மூன்று வருடங்கள் கூட நின்று நிலைக்கவில்லை; அனைத்தும் மறந்து போனது. 2004 இல் காப்பாற்றிய கரங்கள், 2007 இல் துப்பாக்கியெடுத்து பரஸ்பரம் வேட்டையாடத் தொடங்கின.

இழப்புகள் நமக்குப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், இழப்புகளிலிருந்து மட்டுமே கற்றுக் கொள்கின்றவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான் இங்கு வேதனையான விடயமாக உள்ளது.

இந்த வெள்ள அனர்த்தத்தில் நம்மிடையே கொப்பளித்துக் கொண்டிருக்கும் இன நல்லுறவு, வெள்ளம் வடியும்போது, இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்பதுதான் கவலையளிக்கிறது.

நாட்டில் ஒரு பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தின்போது மட்டும், 177 பேர் பலியாகியுள்ளனர். 109 பேர் காணாமல் போயிருக்கின்றார்கள். ஐந்து இலட்சம் பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்று எல்லாச் சமூகத்தினரும் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இனப்பாகுபாடுகளின்றி எல்லாச் சமூகத்தவர்களும் உதவிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, பௌத்தர்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்கு பௌத்தர்களும் உதவுகின்ற தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி, நம்மை புளகாங்கிதமடையச் செய்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரர் தலைமையில் இன வெறுப்புப் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று, சில நாட்கள் கழிவதற்குள் பௌத்தர்களும் முஸ்லிம்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்து, உதவிக் கொண்டிருக்கின்றமையைப் பார்க்கும் போது, புளகாங்கிதமடையாமல் இருக்க முடியாதுதான்.

ஆனால், இவைவெல்லாம் எத்தனை நாளைக்கு என்பதுதான் இங்குள்ள ஆபத்தான கேள்வியாகும்.

இந்த வெள்ள அனர்த்தம் கூட, அடுத்த சமூகத்துக்குத் தண்டனையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்று கூறிக் கொள்கின்றவர்களையும் இங்கு காணக்கிடைக்கிறது. சமூக வலைத்தளங்களில் இதனை மிக வெளிப்படையாகவே சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர். நம்மவர்கள் எந்தளவுக்கு இனக் குரோதம் எனும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.

இன்னொருபுறம், “புத்த மதத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இந்த வெள்ள அனர்த்தத்துக்குக் காரணமாகும்” என்று, ஞானசார தேரர் கூறியிருக்கின்றார். புத்த மதத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, ஞானசார தேரர் கூறியிருப்பது முரண்நகையாகும்.

ஞானசார தேரரைக் கைது செய்யும் பொருட்டு, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில், எங்கோ மறைந்திருந்தபடி, ஒலிப்பதிவு ஒன்றின் மூலம், மேலுள்ள விடயத்தை ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார். எவ்வாறாயினும், ஞானசார தேரர் கூட, இந்த வெள்ள அனர்த்தத்தை ஒரு தண்டனையாகவே பார்க்கிறார்.

இன்னொருபுறம், சக மனிதனைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்துப் பணியாற்றுகின்றவர்களையும் தற்போதைய மீட்புப் பணிக் களத்தில் பார்க்கக் கிடைக்கிறது. வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணொருவரை ‘கேபிள்’ உதவியுடன் ஹெலிகொப்டருக்குக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வை.எம்.எஸ். யாப்பாரத்ன எனும் விமானப்படை வீரர், கீழே வீழ்ந்ததால் மரணமானமை பெருந்துயரமாகும். இந்த வீரருக்கு எல்லாச் சமூகத்தினரும் தமது மரியாதையைச் செலுத்தி வருகின்றமையும் இங்கு கவனிப்புக்குரியதாகும்.

அனர்த்தங்கள் நேரும்போது, உணர்ச்சிகளுக்குள் மட்டும் நாம் சிக்கிக் கொள்கின்றமையினால், நாட்டில் ஏற்படும் அனர்த்தமொன்றை எதிர்கொள்ள முடியாதளவுக்கு நமது அரசாங்கம் மிகப் பலவீனமாக உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க நாம் தவறி வருகின்றோம்.

ஒவ்வொரு அனர்த்தத்தின் போதும், அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு நாம் ஆளாகின்றோம். பெருமளவு மழை வீழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், நமது குளங்கள் உடைப்பெடுக்கும் நிலையில் இருக்கின்றன. மீட்புப்பணியில் ஈடுபடும் நமக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் வீழ்ந்து நொறுங்குகின்றன. இவையெல்லாம் ஏன் என்பது பற்றி, அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் நிலையில் நம்மில் அதிகமானோர் இல்லை.

பேரனர்த்தமொன்றின் போது கூட, இனக் குரோதத்துடன் யோசிக்கத் தலைப்படுகின்றவர்களிடத்தில், அறிவுபூர்வமான சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது.

நாமெல்லாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காகவே, உணர்ச்சிவசப்படும் கும்பலாக நாம் மாற்றப்பட்டிருக்கின்றோம் என்பது அதிர்ச்சியான உண்மையாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், கரையோரப் பிரதேசங்களில் பெய்த மழையில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை, இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். கடல் மிக அருகிலிருந்தும், அதனுள் வெள்ள நீரைக் கொண்டு சேர்ப்பதில் அப்போது பாரிய சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

வடிகான்கள் நிர்மாணிக்கப்படாமை, சரியான முறையில் வடிகான்கள் அமைக்கப்படாமை, நீர் வடிந்தோடும் இடங்களை மறித்துக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமை, அவ்வாறு கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கியமை, சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட அவ்வாறான கட்டடங்களை அகற்றாமை உள்ளிட்ட பல காரணங்களால், வெள்ள அனர்த்தம் பன்மடங்காக உயர்ந்தது.

அரசாங்கத்திலுள்ள மோசடிக்காரர்களும் ஊழல்வாதிகளுமே இதற்குப் பிரதான காரணமாவார். வெள்ளம் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளைச் சரியாகச் செய்திருந்தால், நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் பேரனர்த்தத்தையும் கணிசமானளவு குறைத்திருக்க முடியும். ஆனால், இவை பற்றிப் பொதுமக்களாகிய நம்மில் கணிசமானோர் சிந்திக்க முற்படுவதில்லை.

“புத்த மதத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான், இந்த வெள்ள அனர்த்தத்துக்குக் காரணமாகும்” என்று கூறும் தேரர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திப்பதற்கு மக்களை விடுவதாகவும் இல்லை.

மோசடிக்காரர்களையும் ஊழல்வாதிகளையும் காப்பாற்றுவதற்காக, மதத்தை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்துகின்றனர் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நமது தேசம், இன்னும் மனிதாபிமானத்தை இழந்து விடவில்லை என்பதையும் ஒவ்வொரு அனர்த்தங்களின் போதும் நம்மால் கண்டு கொள்ள முடிகிறது. ஆனால், அந்த மனிதாபிமானத்தையும், அதனூடாகத் துளிர்விடும் இன நல்லுறவையும் நிலையானதாகவும் பலமானதாகவும் பேணுவதற்கு நம்மால் முடியாமலுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது பலவீனத்தை நாம் இனங்கண்டு, அதைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும்.

இனவாதச் சிந்தனைக்குள் நம்மில் கணிசமானோர் மூழ்கிப்போய் கிடக்கின்றார்கள். இன்னுமொரு சாரார், இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தமது சமூகம் சார்ந்தோரை எதிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால், இனக்குரோத நடவடிக்கைகளிடம் மனிதாபிமானம் பல தருணங்களில் தோற்று விடுகின்றது. இனவாதிகள் தலையெடுக்கும் சூழலொன்றில், இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் வலுவிழந்து போய் விடுகின்றன.

நமது தேசம் பல்வேறுபட்ட இயற்கை மற்றும் செயற்கையான அனர்த்தங்களினால் பேரவலங்களைச் சந்தித்துள்ளது. அது இப்போதும் தொடர்கின்றது. தற்போதைய இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகிய செய்தி நெஞ்சை உலுக்கியது. அந்தக் குடும்பத்தில் உயிர் பிழைத்தவர்களின் நிலை பற்றி நாம் பெரிதாக யோசிப்பதில்லை. அவர்கள் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பர்.

அந்தப் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் அநேகமாக மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த வாரப் பத்தியிலும் இது குறித்து நாம் எழுதியிருந்தோம். வெள்ளம் வடிந்தவுடன் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பி விடக் கூடாது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை உள ரீதியான பாதிப்புகளிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் சர்வதேச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னொரு காலத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தன.

ஆனால், இப்போது அவ்வாறான செயற்பாடுகளை முன்பு போல்க் காணக்கிடைப்பதில்லை. எனவே, இது குறித்து அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருளாதார உதவி மற்றும் உடல் ரீதியான சிகிச்சை ஆகியவற்றை வழங்குகின்றமைபோல், உள ரீதியான பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் உதவிகளும் வழங்கப்படுதல் அவசியமாகும்.

இப்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம், மீதொட்டுமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தை மறந்து போகச் செய்துள்ளது. தற்போதைய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, இன்னும் எதுவரை நாம் நினைவில் வைத்திருக்கப் போகின்றோமோ தெரியவில்லை. ஓர் அனர்த்தத்தைக் கொண்டு, இன்னொரு அனர்த்தத்தையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் வெகுவாக மறந்து விடுகின்றோம். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தொகையினருக்கு, இன்னும் வீடுகள் வழங்கப்படவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவிலுள்ளது. சுனாமி ஏற்பட்டு 13 வருடங்களாகி விட்டன.

கடந்த வருடம் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் அரநாயக்க சிறிபுர மலைத் தொடரில் ஏற்பட்ட மண் சரிவு குறித்தும், அதனால் ஏற்பட்ட அனர்த்தம் பற்றியும் கிட்டத்தட்ட, ஒட்டு மொத்தமாகவே நாம் மறந்து விட்டோம். அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி இப்போதெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதேயில்லை.

இன்னொருபுறம் யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர், அடிப்படை வசதிகளின்றியும், உள நோய்களினாலும் பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, நமது தேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரை மீளவும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதில் எந்தவொரு ஆட்சியாளர்களும் இதுவரையில் போதியளவு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையிலானதொரு தேசமாகவும் நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ளவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஏன் இந்த நிலை என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். நமது வரவு – செலவுத் திட்டங்களில் இதற்கான நிதியொதுக்கீடுகள் போதுமானவையாக ஏன் இருப்பதில்லை என்று நாம் கேட்க வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்யப் போகிறோம் என்கிற கோதாவில் நமது ஆட்சியாளர்கள் செலவு செய்கின்ற நிதிகளுக்கு அர்த்தமில்லை என்பதை, அனர்த்தங்கள் ஏற்படும் தருணங்களில்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் கடைசி அனர்த்தம் இதுவாகவே இருக்க வேண்டும் என்பது நமது பேராசையாகும்.

இழப்புகளிலிருந்து மட்டுமே, புத்திசாலிகள் – பாடங்களைக் கற்றுக் கொள்வதில்லை. இழப்புகளிலிருந்து மட்டுமே பாடங்களைக் கற்றுக்கொள்கின்றவர்கள் புத்திசாலிகளாக இருப்பதுமில்லை.

நன்றி: தமிழ் மிரர் (30 மே 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்