நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

🕔 April 28, 2017

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி நிலையங்களால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது விற்பன்னர்கள் அடங்கிய ஒரு குழுவினை கடந்த மாதம் நியமித்தது. இக்குழுவின் கூட்டத்தில், மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூகங்கள், இலங்கை மின்சார சபையின் பிரதிநிதிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வட மேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை, கடலோரப்பகுதிப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் என்வயமெண்ட் ஃபவுண்டேஷன் அமைப்பு ஆகியோர் இந்தப் பிரச்சனையால் சுற்றுச் சூழலில் ஏற்படும் தாக்கம் பற்றியும் அதன் மூலம் அப்பிரதேச வாசிகள் எதிர்கொள்ளும் இடர்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உயர்நீதிமன்றமானது, வட மேல் மாகாணத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்தை ஒழுங்குறுத்துவதற்கான படிமுறைகளை முன்னெடுக்குமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைப் பணித்தது.இந்த மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பிலேயே, இந்தப் பணிப்புரையினை நீதிமன்றம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கியது.குறித்த பிரதேசத்தில் காற்றில் சாம்பல் துகள் பரவுகை மற்றும் மீந்திருக்கும் நிலகரி ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்பினை குறைக்கும் செயன்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டது.இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்ட ரீதியான அதிகாரம் பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே இந்த சுற்றுச்சூழல் சேதம் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் கையாள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 05ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இப்பிரச்சனை ஆழமாக உரையாடப்பட்டதோடு, ஏப்ரல் 24ம் திகதி நடைபெற்ற இரண்டாம் கூட்டத்தில் அப் பிரதேச மக்கள் தங்கள் பிரச்சனைகளையும் கருத்துகளையும் எழுத்து மூலமாக, ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட குழுவிற்குச் சமர்ப்பித்தனர்.

நுரைச்சோலை மின்னிலையம் என்று அழைக்கப்படும் ‘லக்விஜய’ மின்னிலையமானது நிலக்கரியால் இயக்கப்படும் இலங்கையின் பாரிய மின்னிலையம் ஆகும். 900 MW சக்தியை பிறப்பிக்கும் இந்த மின்னிலையம் நாட்டின் ஒட்டுமொத்த சக்தித்தேவையில் 39% இனை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சனைக்கு குறுங்கால, நடுத்தர கால, நீண்டகால அடிப்படையிலான ஒழுங்குறுத்துகைப் பொறிமுறையினை அபிவிருத்தி செய்தல் பற்றி இக்கூட்டத்தில் உரையாடப்பட்டதோடு, காலத்திற்குக் காலம் எழுகின்ற இவ்வகையான பிரச்சனைகளை, இலங்கை மின்சார சபையுடன் கைகோர்த்து தீர்த்துக் கொள்வதற்காக, சமூக அடிப்படையிலான குழுக்களை அமைப்பதற்கான தேவை பற்றியும் பேசப்பட்டது.

இந்தக் குழுவின் அடுத்த கூட்டமானது 2017 மே22ம் திகதி திங்கட்கிழமை கூடவுள்ளதுடன் இக் கலந்துரையாடல்களின் முடிவுகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்