ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது

🕔 April 1, 2017

– முன்ஸிப் அஹமட் –

பொத்துவில் பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை மீது, கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மேடையில் பேசிக் கொண்டிருந்த சிலர்; “கற்களை வீசுவதென்றால் வீசுங்கள், ஆனால் நாங்கள் கூறுவதைக் கேட்டு விட்டு, பிறகு கற்களை வீசுங்கள்” என்று மன்றாட்டமாக ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்ட போதும், கல் வீச்சு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, கூட்டம் ஆரம்பித்து பல மணி நேரத்தின் பின்னர், இரவு சுமார் 9.40 மணியளவிலேயே மு.கா. தலைவர் மேடைக்கு வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தைக் காண்பதற்காக பார்வையாளர்கள் மிகவும் குறைந்தளவே வந்திருந்தமையினால், மு.காங்கிரசின் தலைவர் மேடையேறும்போது வழமையாக ஒலிக்கும் “ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்” பாடல், பொத்துவில் மேடையில் ஒலிக்க விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மு.கா. தலைவர் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தினை பகிஸ்கரிக்குமாறு, ‘பொத்துவில் உலமா சபை’ எனும் பெயரில் துண்டுப் பிரசுரமொன்றும் வெளியாகியிருந்தது.

மு.காங்கிரசின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தவர்கள் எனும் குற்றச்சாட்டில், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

“கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள், கல்லெறிய வேண்டாம்” என்று, மேடைப் பேச்சாளர்கள் கெஞ்சிய போதும், கல்வீச்சு தொடர்ந்ததாக, அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டபோது – வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்