மேற்கு மலைக் காடுகளுக்குள் ஒளிந்து திரிந்தவர், முதல்வரானார்: பழனிசாமியின் முன் கதைச் சுருக்கம்

🕔 February 16, 2017

Palanisamy -20545மிழகத்தின் முதலமைச்சராகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் பல சிரேஷ்ட உறுப்பினர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த இடத்தை இவர் எப்படிப் பெற்றார் என்பதற்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அவை என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 1954 ஆம் ஆண்டு பிறந்தார் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி படிப்பில் சிறப்பு என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஆனால், படுமோசமானவர் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்தப்பின், ஈரோடு வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் படித்தார்.  படிக்கும் போதே எம்.ஜி.ஆர். மீது பிடிப்பு ஏற்பட்டது. அது அரசியல் பிடிப்பாக உருமாறி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

சீனி வியாபாரி 

கல்லூரியில் படிப்பு முடித்த பின்னர், எடப்பாடியைச் சுற்றி உள்ள பகுதிகளில் சீனி உற்பத்தியாளர்களிடம் இருந்து சீனி மூட்டைகளை வாங்கி சந்தைக்குக் கொண்டு சென்று, கொமிசனுக்கு விற்பனை செய்து வந்தார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கொமிசன் வைத்து சீனி வியாபாரம் செய்தார். பெரிதாக லாபம் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது தொழில் வாழ்க்கை. ஆனாலும், அரசியல் வாழ்க்கை உள்ளே அழுத்திக் கொண்டே இருந்தது.

அரசியல்

அ.தி.மு.க.வின் முக்கியஸ்தரான செங்கோட்டையனைச் சந்திக்கிறார். அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறார். கோணேரிபட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு கிடைக்கிறது.  1989-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கிறது. வெற்றியும் கிடைக்கிறது. மீண்டும் 1991-ல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.  மீண்டும் வெற்றி. அவருக்கு எல்லாம் சரியாகத்தான் சென்றது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு இல்லை.  1991 -96 காலக்கட்டம், ஜெயலலிதா மொத்தமாக கெட்டப் பெயர் சம்பாதித்த காலம்.

தொடர் தோல்வி

இந்தக் காலப்பகுதியல், அதாவது 1996  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட பழனிசாமி படுதோல்வி அடைகிறார். மூன்று ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி கவிழ்கிறது. மீண்டும் 1999-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி அடைகிறார். மீண்டும் 2004-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போதும் தோல்வி.  2006 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போதும் தோல்வி. தொடர்ச்சியான தோல்விகளால் அவர் துவண்டுவிடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சியும் துவண்டுவிடவில்லை.

வெற்றி மேல் வெற்றி

மீண்டும் 2011 -ல் வாய்ப்பு வழங்குகிறது. வெற்றி பெறுகிறார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகிறார். 2016- ல் மீண்டும் வாய்ப்பு. மீண்டும் வெற்றி… மீண்டும் அமைச்சர் பதவி.

இவ்வளவு வெற்றிகள் கண்டிருக்கிறார். அதுபோல், அத்தனை தோல்விகளையும் கண்டிருக்கிறார். எப்படி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த பதில்தான் சசிகலா மீதும்அவர் குடும்பமான மன்னார்குடி மீதும் காட்டிய விசுவாசம்தான் காரணம் . தொடக்க காலத்திலேயே சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக பழனிசாமி மாறினார். அதனால்தான், செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்ட போதும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

மன்னார்குடி விசுவாசம் 

ஒரு கட்டத்தில் பன்னீர்செல்வம்  மற்றும் நத்தம் விஸ்வநாதன் நடவடிக்கைகள் மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் பிறகு கட்சியின் அனைத்து உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிசாமியே கவனித்து வந்தார்.  இவரின் விசுவாசமும், சசிகலா தரப்பு இவர் மீது வைத்த நம்பிக்கையும், ஜெயலலிதா இறந்தபோது, இவர் மேலும் முக்கியத்துவம் பெற காரணமானது. அப்போதே, இவர் பெயர் முதல்வர் பதவிக்காக  சசிகலா தரப்பால் முன்மொழியப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது.

இப்படியான சூழலில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக திரும்ப, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல, இப்போது முதல்வர் ஆகி இருக்கிறார் பழனிசாமி.

மாயம்

ஒரு முக்கியமான விஷயம். சில தசாப்தங்களுக்கு முன்,  இவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில்,  நில விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டார்கள். அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகி, ஒளிந்து திரிந்தார்கள்.

அந்த வழக்கில் தேடப்பட்டவர்களில் ஒருவர்தான் – எடப்பாடி பழனிசாமி.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்