இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

🕔 February 8, 2017

Purl Grand - 03– அஹமட் –

மு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும்  இடையிலான பிரச்சினை போல் சிலர் கருதவும், காட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படியல்ல.

முஸ்லிம் சமூகத்தினால் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட, ஓர் அரசியல் இயக்கத்தை வைத்துக் கொண்டு, அதன் தலைவரும் பிரதிநிதிகளும் எவ்வாறெல்லாம் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகளாகவே, மு.கா. தவிசாளர் பசீர் வெளியிட்டு வருகின்ற அந்தரங்க ஆதாரங்களைக் காண முடிகிறது.

எனவே, இவை குறித்து ஒரு பொறுப்புள்ள ஊடகமாக – மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒரு சமூகத்தையே அரசியலின் பெயரால் ஏமாற்றிய துரோகிகளை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. எனவே, இது குறித்து தொடர்சியாக நாம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்காக நாம் பல்வேறு விதமான தேடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். அதன் முதல் முயற்சியே இதுவாகும்.

O

டந்த ஜனாதிபதி தேர்தல் காலம். ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவும், அன்னச் சின்னத்தில் பொது வேட்பாளராக மைத்திரபால சிறிசேனவும் களமிறங்கியிருந்தனர். அரசியல் அரங்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் எந்த வேட்பாளருக்கு தமது ஆதரவு என்கிற நிலைப்பாட்டினை அநேகமாக அறிவித்திருந்தன.  ஆனால், அந்த முஸ்லிம் கட்சி மட்டும் தனது நிலைப்பாட்டை  அறிவிக்கவில்லை. ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கே அந்தக் கட்சியின் தலைவர் எண்ணியிருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் உயர்பீடத்திலுள்ளவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் தலைவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மனமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கின. அதற்கான பொறுப்பு கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்குப் பிராந்திய தளபதியுமானவரிடம் வழங்கப்பட்டது. இதற்காக, பெரும் தொகைப் பணமும் அள்ளி இறைக்கத் தயாராக இருந்தது.

அந்தக் கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் 05 பேர், பம்பலப்பிட்டியிலுள்ள ‘பேர்ல் கிராண்ட்’  நட்சத்திர ஹோட்டலில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்கான தலைவரின் முடிவுக்கு முட்டுக் கொடுப்பதற்குரிய வாக்குறுதி, இந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பெறப்படுகிறது. இவர்களும் ‘ஆம்’ என்கிறார்கள். அதற்கான பரிசுகளில் ஒன்றாகத்தான், ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த ஹோட்டலில் என்னதான் நடந்தது. தவிசாளர் பசீர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதை விபரிக்கின்றார். “அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் அவசிய தருணங்களில், நமது பண்டமாற்றுப் பதவிப் பணக்காரர் பில் செலுத்த, கூட்டமாக நம் பிராந்தியப் பிரதிநிதிகள் குடியும் கூத்தியுமாக குதூகலித்தனர்” என்று, அந்த துரோகத்தை பசீர் அம்பலப்படுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதென முஸ்லிம் சமூகமே முடிவு செய்திருந்த அந்தத் தருணத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த கட்சித் தலைவருக்கு முட்டுக் கொடுப்பதற்காக, கிழக்கின் அந்த 05 மக்கள் பிரதிநிதிகளும் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள். அந்த 05 பேரில் அதிகமானோர் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து வந்தவர்கள்.

அந்த நாட்களில்,  கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் அநேகமானோர் கொழும்பிலேயே தங்கியிருந்தனர். கட்சியினுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் கொழும்பிலுள்ள ஒரு ‘லொட்ஜ்’ இல்தான் தங்கிருந்தார். அப்போதெல்லாம்; “நமது கட்சி – மைத்திரிக்குத்தான் ஆதரவு வழக்க வேண்டும்” என்று, அந்த மூத்த தலைவர் அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில், ‘லொட்ஜ்’ இல் தங்கிருந்தால் செலவாகிறது என்று, மூத்த தலைவர் பலரிடமும் கூறிக் கொண்டிருந்த வேளையில், அவரையும் ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவரும் அங்கு சென்று ஓர் இரவு மட்டும்தான் தங்கினார். மறுநாள் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரைச் சந்தித்த மூத்த தலைவர்; “மஹிந்தவுக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து வெல்லுவது கஷ்டம். சிங்கள மக்கள் எல்லோரும் மஹிந்தவுக்குத்தான் ஆதரவு போல் தெரிகிறது. எனவே, நமது கட்சியும் மஹிந்தவை ஆதரிப்பதுதான் சரியாகும்” என்றார். ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலின் ஒற்றை இரவு, மூத்த தலைவரை இப்படி மாற்றியிருந்தது.

‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலில் தங்கியிருந்த கிழக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் 05 பேரும் மது அருந்தினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பெண்களுடன் உல்லாசித்தார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

மு.கா. தவிசாளரின் ‘பேஸ்புக்’ பதிவு மொழியில் சொன்னால்; குடியையும், கூத்திகளையும் அனுபவித்து விட்டு, கட்சியின் உயர்பீடத்து அந்த 05 பிரதிநிதிகளும் வந்தார்கள். அப்போது, ‘எந்த வேட்பாளருக்கு கட்சி ஆதரவளிப்பது’ என்கிற வாதப் பிரதிவாதம் ஆரம்பித்தது. அப்போது, அங்கிருந்த நேர்மையான சில உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ செய்த அநியாயங்களைச் சொல்லி, மைத்திரிக்கே நமது கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என்றார்கள். அப்போது ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலில் தங்கியிருந்த அந்த 05 பேரில் ஒருவர் எழுந்தார். “நமது கட்சி மஹிந்தவுக்கே ஆதரவு வழங்க வேண்டும்” என்றார். “மைத்திரிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பவர்கள் அதற்குரிய விஞ்ஞானபூர்வ விளக்கத்தினை முன்வைக்க வேண்டும்” என்று உரத்துப் பேசினார். இப்படி அவர் கூறியமை, அப்போதே ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும், மைத்திரிக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் கட்சியின் செயலாளர் நாயகம் ஒற்றைப் பிடியாக நின்றார். “நீங்கள் வராவிட்டாலும், மைத்திரியின் பக்கம் நான் சென்று விடுவேன்” என்று செயலாளர் நாயகம் கூறினார். முஸ்லிம் மக்களும் மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். கடைசியில், தபால்மூல வாக்குகளும் அளிக்கப்பட்ட பின்னர், கட்சியின் தலைவர் ஒருநாள் மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக, கனத்த மனதுடன் அறிவித்தார்.

‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டல் கதை, இத்துடன் முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் தலைவர் போட்ட கூத்தால், ஒரு குடும்பம் பிரிந்த கதையும் இருக்கிறது.

பின்னொரு நாளில் அந்தக் கதையுடன் சந்திப்போம்.

தவிசாளர் பசீரின் பேஸ்புக் பதிவுகள்:Purl Grand - 07 Purl Grand - 06

 

பேர்ல் கிராண்ட் ஹோட்டல் உள்ளும், புறமும்:Purl Grand - 05 Purl Grand - 02 Purl Grand - 04 Purl Grand - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்