தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

🕔 February 8, 2017

SEUSL - 013– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்துக்கு 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அதி உச்ச அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு, தாம் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்துக்கான அதிநவீன ஆய்வுகூடத் தொகுதியினை இன்று புதன்கிழமை உபவேந்தர் நாஜிம் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

பீடாதிபதி கலாநிதி எம்.ஜி. முகம்மட் தாரீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.எல். அப்துல் ஹலீம், பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அனீஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வி.ஜி.என். செவ்வந்தி, விரிவுரையாளர் எம்.ஜெ. அஹ்மட் சபானி மற்றும் விரிவுரையாளர் எம்.எம்.எப். நஜா, உப பதிவாளர் எம்.எப். முகம்மட் மர்சூக் ஆகியோருடன் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பிரிவு மற்றும் உயிர்முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவு என இரண்டு திணைக்களங்களைக் கொண்டு இயங்கும் தொழில்நுட்பவியல் பீடத்தில், திறந்து வைக்கப்பட்ட அதிநவீன ஆய்வுகூட தொகுதியில் மென்பொருளாக்க தொழில்நுட்பவியல் ஆய்வுகூடம், வலையமைப்பு மற்றும் கணணிப்பாதுகாப்பு முறைமையியல் தொடர்பான ஆய்வுகூடம் மற்றும் யுவிகியூட்டோஸ் ஆய்வுகூடம் என மூன்று ஆய்வுகூடங்கள் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தர் நாஜிம் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காகவும் இங்கு கல்விபயிலும் மாணவர்களின் அதிஉச்ச அறிவை விருத்திசெய்யும் பொருட்டும் அதிக கருசணை செலுத்தி வருகின்றோம். வசதிகளையும் அதிகரித்து வருகிறோம். திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுகூடத்தில் 01 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பொறுமதியான 75 கணிணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகூடத்துக்கு கிட்டத்தட்ட 13 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. மேலும், வைபை உள்ளிட்ட உயர் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றினை மாணவர்கள் தங்களது உயர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டும்.

இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களாகும். எனவே, இவற்றின் கௌரவத்தை உயர்த்தும் வகையில் பாவித்து மாணவர்களும் உயர்ச்சியடைவதே மேலாகும்.

பல்வேறுபட்ட உயர்வான வசதிகளை உருவாக்கித்தந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக, பல்கலைக்கழகத்துக்கு வெளியே பேசப்படும் விதத்தைக் கொண்டே, இங்கிருந்து பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களின் தரமும் நோக்கப்படும். இதுவிடயத்தில் மாணவர்கள் அவதானம் செலுத்தவேண்டும்.

தொழில்நுட்பவியல் பிரிவில் இணைந்துள்ள மாணவர்கள் எதிர்கால தொழில் சந்தையில் இலகுவாக தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் தங்கள் தரத்தை அதிகரிப்பதனூடாக இன்னும் உயச்சியடையலாம். மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் இவ்வாறான உயர் கல்விக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும்” என்றார்.

கடந்த வருடம்,  75 மாணவர்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.SEUSL - 015 SEUSL - 014

Comments

புதிது பேஸ்புக் பக்கம்