பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

🕔 February 6, 2017

Hakeem - 86முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைகளை உயர்த்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த 04 ஆம் திகதி, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந்த உயர்பீடக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று, ஏற்கனவே அனுப்பப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அவை குறித்து பேசப்படாமல், பசீரின் தவிசாளர் பதவியினை இடைநிறுத்த வேண்டும் என்கிற விடயம் மாத்திரமே அங்கு பேசப்பட்டு, அதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.

மு.கா. தவிசாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தினை, சாய்ந்தமருதைச் சேந்த உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் முதலில் முன்வைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வேறு சிலரும் இதே கருத்தினை முன்வைத்தனர். இதனையடுத்து, தவிசாளர் பதவியிலிருந்து பசீரை இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானத்துக்கு ஆதரவினைப் பெறும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் மு.கா. தலைவர் கூறி அழைத்து, அவர்களை குறித்த கருத்துக்கு ஆதரவாக கைகளை உயர்த்த வைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவினை வழங்குவார்களா என்று, மு.கா. தலைவர் சந்தேகித்த சிலரின் பெயரைக் கூறி அழைத்து, அவர்களை கைகளை உயர்த்த வைக்கும் நிலைக்கு ஹக்கீம் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி ஆகியோரை பெயர் கூறி அழைத்து, அவர்களை  பசீரை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவாக, கைகளை உயர்த்தும் நிலைக்கு ஹக்கீம் கொண்டு வந்தார் எனத் தெரிய வருகிறது.

இவ்வாறு இவர்கள் கைகளை உயர்த்தும் போது, அங்கு நின்றிருந்த மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர்கள், அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நடைபெறும் போது, உயர்பீட உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவரும் அங்கு இருக்க முடியாது. ஆயினும், தனது ஊடகப் பிரிவினர் நான்கு பேரை, உயர்பீடக் கூட்டம் நடக்கும் போது அங்கு நிறுத்தி, தனக்குத் தேவையானவற்றினை ஹக்கீம் வீடியோக்களாவும், புகைப்படங்களாவும் பதிவு செய்து வருகின்றமை குறித்து, நம்மிடம் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆயினும், இது குறித்து தமது எதிர்ப்பை உயர்பீடத்தில் வெளியிட்டால், ஹக்கீம் தமது அரசியலுக்குக் குழி பறிக்க ஆரம்பித்து விடுவார் என்றும் சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

உயர்பீடத்துக்கான 90 பேரைக் கொண்ட உறுப்பினர்களில், 56 பேரை மு.கா. தலைவர் ஹக்நேகீம் நேரடியாகத் தெரிவு செய்கிறார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் ஹக்கீமின் விசுவாசிகளாவர்.

அதேவேளை, உயர்பீடத்தில் பதவி வழியாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர். இவர்களில் கணிசமானோரும் ஹக்கீமை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உயர்பீடத்திலுள்ள இன்னும் சிலருக்கு,  மு.கா. தலைவர் ஹக்கீம் தன்னுடைய அமைச்சிலும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சுக்களிலும், தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதியமைச்சுக்களிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்