‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

🕔 February 1, 2017

Hakeem - 011111– முன்ஸிப் அஹமட் –

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக் கூறினார்.

மு.கா. தலைவர் ஹக்கீம், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் மற்றும் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் சல்மான் ஆகியோர், மு.காங்கிரசின் சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டி, தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம்  எனும் மேற்படி நூல் அண்மையில் வெளியாகி இருந்தது.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டடம், அதனோடு இணைந்த காணி மற்றும் கட்சியின் சொத்துக்களை மேற்படி நபர்கள் மோசடி செய்து தம்வசப் படுத்திக் கொண்டனர் என, அந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான புத்தகம் குறித்து பேசும் போதே, அதில் உண்மைகளும் இல்லாமலில்லை என்று, ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மு.கா. தலைவர் இவ்வாறு கூறியமையானது, கட்சிப் பிரமுகர்களிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அண்மைக் காலமாக மிகவும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதனை உண்மைப்படுத்துவது போல், ஹக்கீமுடைய அந்தப் பேச்சு அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் சுத்தப் பொய்யானது என்றும், எந்த வித அடிப்படையுமற்றவை எனவும் மு.கா. தலைவர் ஹக்கீம் அதே உரையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்