செங்கல் திருடுவோரால், சீனப் பெருஞ் சுவருக்கு பாரிய சேதம்; ஆய்வில் தெரிவிப்பு

🕔 July 2, 2015

Great wall of China - 01சீனப் பெருஞ் சுவரிலுள்ள செங்கற்களை – மக்கள் திருடுவதால், குறித்த சுவரின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளதாக ‘பெய்ஜிங் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இவ்வாறு அக்கறையின்றி செங்கற்களைத் திருடுவதாலும், இயற்கை மாற்றத்தினாலும் சீனப் பெருஞ்சுவரில் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துவிட்டதாக, குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘யுனெஸ்கோ’வால் – உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், பல ஆயிரம் கிலோமீற்றர் நீளம் கொண்டதாகும். சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை அமைந்த இந்தச் சுவர் – முற்றிலும் மனிதர்களின் உழைப்பால் ஆனதாகும்.

கி.மு. 03 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில், சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368 முதல் 1644 வரையிலான காலகட்டத்தில் மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது.

இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீளமான சுவரின் பகுதிகள் – காற்று, மழை போன்ற இயற்கை மாற்றங்களால் சேதமடைந்து சிதைந்து விட்டதாக,  2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்தது.

இந்த நிலையில் ‘பெய்ஜிங் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில்;

‘சுற்றுலா மற்றும் உள்ளுர்வாசிகளின் செயல்பாடுகளால் – சீனப் பெருஞ்சுவர் பாதிக்கப்பட்டு, பெருமளவில் அழிந்துவிட்டது. பழங்கால கற்கள் மற்றும் செங்கற்களாலான கோபுரங்கள், ஒரு மழைக்கு கூட தாங்காத நிலையிலேயே உள்ளது.

மேலும், வடக்கு மாகாணமான லுலாங்கில் வாழும் மக்கள், வீடு கட்டுவதற்காக –  சீனப் பெருஞ் சுவரிலிருந்து கற்களை திருடிச் செல்கின்றனர். சீன எழுத்துக்குறிகள் இருக்கும் கற்களை சுற்றுலாப் பயணிகளுக்கு, உள்நாட்டு மதிப்பில் 30 யுனான்களுக்கு உள்ளுர்வாசிகள் விற்பனை செய்கின்றனர்.

இதை தொடர்ந்து, செங்கற்களை திருடுவோருக்கு – அங்கு 05 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக, இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அவர்களும் அக்கறையின்றி செயல்படுகின்றனர். மேலும் மழை, உப்புக் காற்று போன்ற பல இயற்கை மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்படுகிறன’ என்று குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்