ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

🕔 September 28, 2016

kilakkin-eluchi-89734– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் –

‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே மற்றும் எழுக தமிழ் போன்றவை இனவாத, தீவிர சக்திகள் என்றும், இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

கிழக்கின் எழுச்சியை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.கா. தலைவர் ஹக்கீம் கருத்துக் கூறியிருக்கின்றமை எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவரது சரிந்துவரும் அரசியல் செல்வாக்கினால் ஏற்பட்ட அரசியல் வங்குரோத்து நிலை காரணமாக இவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

அண்மைக்காலமாக ரவூப்ஹகீமிடம்  ஏதாவது கேள்விகள் கேட்கப்பட்டால், அதை தனக்கு எதிராக செயற்படுபவர்களைத் திட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

அவரது கிண்டல் மிகுந்த சொல்லாடல்களில் பதவி இழந்தவர்கள் என்றும், தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், தூக்கி எறியப்பட்டுப் பின்கதவால் அரசுடன் ஒட்டிக் கொண்டவர்கள் என்றும், அரசுடன் ஒட்டிக் கொள்ளக் காத்துக் கிடப்பவர்கள் என்றும் – பல வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்திருக்கின்றன.

இதன்மூலம் அவர் சொல்ல விரும்புவது என்ன? அவர் குறிப்பிடுகின்றவர்கள் எல்லோரும் அரசியலில் எந்தக் கருத்தையும் முன்வைக்கும் தகுதியற்றவர்களா? அரசியலில் பதவியில் இருந்தால் மாத்திரம்தான் கருத்துச் சொல்ல முடியுமா? பதவி பதவி என்று ஆலாய்ப்பறந்து பெற்ற பதவிகளால் பதினாறு வருடங்களாக சாதித்தது என்ன? பதவிகளின்றி எத்தனையோ ஆளுமைகள் இன்று சமூகம் பற்றி சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள் அவர்களை எல்லாம் செல்லாக்காசுகளாகவா ஹகீம் கருதுகிறார்?

பதவி கிடைக்காதவர்கள் என்று ஹக்கீம் எள்ளி நகையாடுகின்றவர்கள், மக்களினால் பதவி இழக்கச் செய்யப்படவில்லை. ஹக்கீம் தனது நீண்டகால திட்டமிடலின் மூலம் நயவஞ்சகத்தனமாக பதவி கிடைக்காமல் ஆக்கினார்.

பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் தீர்வைக்காண முடியும் என்று ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது உண்மைதான். ஆனால் இவையெல்லாம் ஹக்கீமிடம் இருக்கின்றது என்று மக்கள் எவ்வாறு நம்புவது? மக்கள் நம்புமாற்போல் கடந்த காலங்களில் ஹக்கீமுடைய நடவடிக்கைகள் இருந்ததில்லையே. மாபெரும் தவறுகளைச் செய்ததாய் தேர்தல் மேடைகளில் அங்காலாய்க்கும் வரலாற்றுக்குத்தான் ஹக்கீம் சொந்தக்காரர்.

மக்களுக்கும் நாட்டுக்கும் ஹக்கீமுடைய சாணக்கியத்தால் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நன்மைகளைப் பட்டியலிட முடியுமா?

கடந்த பதினாறு வருடங்களாக கிழக்குக்கு வெளியே இருந்த தலைவர், முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்லக் கூடிய ஒரு மாவட்டத்தையாவது கிழக்குக்கு வெளியில் உருவாக்கி இருக்கிறாரா? குறைந்தபட்சம் அவருடைய சொந்த மாவட்டத்திலாவது முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெல்ல முடியுமா? அவரால் முடியாது.

கிழக்கிற்குள்ளாவது கட்சியை வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. கிழக்கில் கட்சியின் வாக்காளர் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாக்குகளால் தொடர்ந்தும் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை அனுபவித்து வருகிறார். இதன் மூலம் கிழக்கு அடைந்த நன்மை என்ன? சொல்லும் படியான ஏதாவது அபிவிருத்தி நடந்துள்ளதா?

இவைதான் ஹக்கீமுடைய சாணக்கியமா?

வரலாற்றுத் தவறுகளைப் புரிந்து விட்டு சர்வசாதரணமாக ஹக்கீம் மன்னிப்புக் கேட்கிறார். அதையெல்லாம் சட்டை செய்யாத ஹக்கீமடைய அடிவருடிகளும், இதன் தாற்பரியங்கள் விளங்காத, அரசியல் விழிப்புணர்ச்சியற்ற பாமரமக்களும் ஹக்கீமுக்கு ஆதரவளிக்கும் வரை, அவருடைய ராஜாங்கம் நடந்து கொண்டிருக்கும்.

விட்டுக் கொடுப்பு அரசியலைச் செய்ய வேண்டியுள்ளது என்று அடிக்கடி ஹக்கீம் கூறி வருகிறார். எதை எதை எல்லாம் விட்டுக் கொடுக்கவுள்ளார் என்பதில் தெளிவில்லாததால் மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்