ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி, தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைஷ தவிர, வேறு யார் உத்தரவிட்டிருக்க முடியும்?
பாரத லக்ஷ்மன், வசீம் தாஜுடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலை தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புப்பட்டுள்ளதுடன், அவற்றினை மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்” என்றார்.
ஆடுகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம், கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதென எவ்வாறு உறுதியாகக் கூற முடியும் என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது வினவினார்.
“அதனை உறுதி செய்வதற்காகத்தான் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது” என பிரதியமைச்சர் கூறினார்.