ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு, பிரேரணை சமர்ப்பித்து சுபையிர் கோரிக்கை

🕔 August 25, 2016

Subair - MPC - 097– எம்.ஜே.எம். சஜீத் – 

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய உறுப்பனருமான எம்.எஸ் சுபையிர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண சபையின் 62ஆவது சபை அமர்வு இன்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தனிநபர் பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகை 16 லட்சத்து 37ஆயிரத்து 236  ஆகும். இந்த நிலையில், இந்த மாகாணத்தில் 120 மாகாண வைத்தியசாலைகளும், 07 மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளும்  உள்ளன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 45 பிராந்திய சுகாதார காரியாலயங்களும் காணப்படுகிறன.

இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் மருந்துகளை கொள்வனவு செய்வதில், தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் கிடைக்காத மருந்தகளை கொழும்பு போன்ற தூர இடங்களுக்குச் சென்று கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. எனவே திருகோணமலை, ம்டக்களப்பு மற்றும் கல்முறை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறப்பதற்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மருந்து விற்பனை நிலையங்கள், போதைப்பொருள் விற்பனை நிலையங்களாக மாறிவருகின்றன. இதனால் தற்போது கிழக்கு மாகாணத்தில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. அதன்காரணமாக மனநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஆரோக்கியமான விடயமல்ல. இதனால் நோயாளர்களுக்கு போதிய திருப்தியும் காணப்படுவதில்லை. ஆகவே, மேற்குறித்த பிரதேசங்களில்  அரச ஒசுசல நிலையங்களை திறப்பதன் மூலம், போதைப் பாவனையிலிருந்தும் மக்களைப் பாதுகாத்துக்கொள்ளவதுடன், மக்களுக்கு திருப்திகரமான சேவைகளையும் வழங்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்