கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

🕔 August 22, 2016

Kamal hasan - 0 1தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருதினை வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகளவில் செயற்பட்டுவரும் முன்னணி மனிதர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச ரீதியாக, செவாலியே விருதினை வழங்கி வருகிறது.

ஏற்கனவே, நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் செவாலியே விருதினைப் பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில், இவ் வருடம் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அமைசினால் இந்த விருது வழங்கப்படுகிறது.

‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் 1960ஆம் ஆண்டு, நான்கு வயதில் கமல்ஹாசன் நடிக்கத் தொடங்கினார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நடிகருக்கான விருது கிடைத்தது. ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களில் – சிறந்த நடிகருக்கான தேசிய விருது, கமலுக்குக் கிடைத்தது.

மேலும், இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் கமல்ஹாசன் பெற்றுள்ளார். அத்தோடு, தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

கடந்த 55 ஆண்டுகளாக திரைத்துறையில் பங்காற்றி வரும் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் நடன இயக்குநர்  என்று, கமல்ஹாசன் பன்முக திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்