தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம்

🕔 August 21, 2016

Hakeem - 09ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பிலான, 06 பக்கங்களைக் கொண்ட பிரசுரமொன்று, கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்பிதழுடன் சேர்த்து, இந்தப் பிரசுரமும் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 23ஆம் திகதி மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட லோட்டஸ் எனும் நம்பிக்கை நிதியம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக, உயர்பீடக் கூட்ட அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் தலைமையகக் கட்டிடம் மற்றும் கட்சியின் சொத்துக்களில் மோசடி நிகழ்ந்துள்ளதாகச் சந்தேகம் தெரிவித்து, கட்சியின் தவிசாளர் பசீர் சேகுவூத், அண்மையில் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

தவிசாளரின் குறித்த கடிதத்தில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமினுடைய உரித்து மற்றும் கட்சியின் சொத்துக்கள், அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் பற்றி 12 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

( மு.கா. தவிசாளர் பசீரின் கடிதம் தொடர்பான செய்தியைப் படிக்க: மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்)

ஆனாலும், பசீரின் கேள்விகளுக்கு – தான் பதிலளிக்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவர் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதும், தற்போது தாருஸ்ஸலாம் குறித்து உயர்பீட உறுப்பினர்களுக்கு பிரசுரம் அனுப்புவதற்கும், அது தொடர்பில் உயர்பீடத்தில் பேசுவதற்கும், கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தாருஸ்ஸலாமினுடைய உரித்து யாருக்கு உள்ளது என்பது பற்றியோ, அல்லது கட்சியின் சொத்துக்கள் பற்றிய முழுமையான விபரங்கள் குறித்தோ, அல்லது கட்சியின் சொத்துக்களை பராமரிப்பதற்குரிய லோட்டஸ் எனும் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களாக எவரெல்லாம் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது தொடர்பிலோ, ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பில், உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என, கட்சியின் முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தவிசளார் பசீர் எழுப்பியிருந்த 12 கேள்விகளில், ஒரு கேள்விக்கேனும் –  குறித்த பிரசுரத்தில் பதில்கள் இல்லை எனவும், உயர்பீட உறுப்பினர்கள் ஏமாற்றம் வெளியிடுகின்றனர்.

‘ தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பில், உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு;01 02 03 04 05 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்