இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை

🕔 July 21, 2016

Uthumalebbe - 096– சலீம் றமீஸ் –

நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போன்று, தற்போது தலை தூக்கியுள்ள இனவாதத்தையும்  இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாணசபையின்அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பொதுபலசேனா மற்றும் இனவாத சிந்தனை கொண்ட  அமைப்புக்களால் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளையும், இனவாத பேச்சுக்களையும் கட்டுப்படுத்துவதுடன் இச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரைக் கோரும் தனிநபர் பிரேரனையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே, உறுப்பினர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“நமது நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம் மக்களுக்கெதிரான செயற்பாடுகளும், இஸ்லாம் மார்க்கத்தினை அவமதிக்கும் செயற்பாடுகளும் பொதுபலசேனா அமைப்பினாலும், இனவாத சிந்தனைகளைக் கொண்ட அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிகழ்வுகளால் நமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படுத்தப்பட்டுள்ளன.

எல்லா மார்க்கங்களும் ஏனைய மார்க்கங்களையும், மார்க்க தலைவர்களையும் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்றே கூறுகின்றது. பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் சமயத் தலைவர்களாக செயற்பட்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர் ஒருவர், ஏனைய சமயங்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் பகிரங்கமாக ஈடுபட்டு நமது நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மோதவிடும் நடவடிக்கைகளை தூண்டி வருவது குறித்து நாம் அனைவரும் கவலையடைய வேண்டியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாத உணர்வுகளைத் தூண்டும் பொதுபலசேனா அமைப்பையும் ஏனைய இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புக்களையும் கட்டுப்படுத்தி இச்செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நமது நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.

புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் நமது நாட்டில் இயங்கும் இனவாத சக்திகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் இனக் குரோதங்களையும், இனங்களுக்கிடையே வெறுப்புக்களை தூண்டும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சிறுபான்மை மக்கள் இருந்தனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் எப்போதும் அமைதியாக வாழ விரும்புபவர்கள். நமது நாட்டின் ஐக்கியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் பாரிய பங்கினை வழங்கியுள்ளார்கள். இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதுடன். மூன்றில் இரண்டு பங்கினர் வட – கிழக்கு மாகணங்களுக்கு வெளியில் பெரும்பான்மை சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

நமது நாட்டில் பெருந்தொகையான மூத்த பௌத்த மதத் தலைவர்கள், சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பெரும்பான்மையினர் நமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இனவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்துவருவது குறித்து சிறுபான்மை மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

தமிழ் மக்களின் சாத்வீக அரசியல் போராட்டங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மூதூரில் இருந்து பொத்துவில் வரையும் உள்ள முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் சாத்வீக அரசியல் போராட்டத்திற்கு தோலோடு தோல் நின்று உதவி புரிந்தனர். அன்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் மாறி மாறி முஸ்லிம், தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பாரம்பரியங்களும் நிகழ்ந்தன. திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூதூரைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மட் அலி, தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்

அம்பாறை மாவட்டத்திலிருந்து எம்.எஸ். காரியப்பர், எம்.சீ. அஹமட், எம்.எம். முஸ்தபா ஆகியோர் தமிரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர். முன்னாள் செனட்டர் மர்ஹூம் மசூர் மௌலானா, டொக்டர் வி. உதுமாலெவ்வை ஆகியோரும் தமிழரசிக் கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட்டு சிறுவாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்ட செல்லையா ராசதுரை ஆகியோருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களித்த வரலாறும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டபிள்யு. தேவநாயகம் அவர்களுக்கும் முஸ்லிம் மக்கள் வாக்களித்த வரலாறும் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்களுக்கும், முன்னாள் பொத்துவில் முதல்வர் னுச.ஜலால்தீன் ஆகியோருக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் வாக்களித்த வரலாறு உள்ளது. தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் முஸ்லிம்களை நோக்கி திருப்பபட்ட போதுதான் முஸ்லிம்களுக்கு என்ற தனிக்கட்சி வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார்.

அதுமட்டுமின்றி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாண சபை வேண்டும் என்ற கோரிக்கையும் உருவாகியது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநீதியான நிகழ்வுகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைவதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதனை இப்போது யாதார்த்தபூர்வமாக உணர்கின்ற நிலமை உருவாகியுள்ளது.

நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதில் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பங்குள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நடைபெற மாட்டாது முஸ்லிம்கள் என எதிர்பார்த்தனர். துரதிஷ்டவசமாக கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பாடுகள் நடைபெற்றதே ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நடைபெற்று வருவது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்துகிறது.

  • பொரளை பள்ளிவாசல் தாக்குதல்
  • கண்டி நகரின் 1886ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின்
  • பள்ளிவாசலுக்கான கோபுரம் அமைக்கத் தடை.
  • தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் விரிவாக்க பணிகளுக்கான அனுமதியினை தெஹிவளை மாநகர சபை வழங்கிவிட்டு, ஏற்கனவே வழங்கிய அனுமதியினை வாபஸ் பெற்றுக் கொண்டமை.
  • அண்மையில் அலவத்துக்கொட பள்ளிக்கு அருகில் பன்றியின் உடற்பாகங்களை வீசியமை.
  • கண்டி அம்பிட்டிய மஸ்ஜிதுல் உஸ்மான் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை.
  • ஊவா மாகாணத்தில் வெளிமடை பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை நிர்மானிக்க தடை விதித்துள்ளமை.
  • உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களது உயிரிற்கு மேலாக கருதும் அல்லாஹ்வையும், இறைத்தூதரையும் கேவலப்படுத்தியமை.
  • 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது. இது முழு உலக மக்களினதும் வாழ்க்கைக்கான அமைப்பாகும். மக்களை நல்வழிப்படுத்துவதே புனித குர்ஆனின் நோக்கமாகும். இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் குர்ஆனை இதயத்திலே ஏந்தியுள்ளனர். முழு உலகில் 165 கோடி முஸ்லிம்கள் தங்களின் உள்ளத்தில் அல்குர்ஆனை ஏந்தியுள்ளனர். இப்புனித அல்குர்ஆனை தடை செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரத்தேரர் சவாலிட்டுள்ளமை.
  • ஹபுகஸ்தலாவ ஹாமிதியா அரபுக் கல்லூரி இரவு வேளையில் தாக்கப்பட்டு பேஸ் மின்மானிகள், தண்ணீர் கொள்கலன்கள், அரபுக் கல்லூரி மாணவர்களின் விரிப்புகள் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளமை.
  • கண்டி லைன் பள்ளி வீதியின் பெயர்ப்பலகையை நீக்குவதற்காக முயற்சி செய்கின்றமை.
  • மடவளையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கூழ்முட்டைகளை வீசியமை.
  • மாகாண சபை என்ற புலியை கட்டி வைக்கும் சங்கிலியே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என சிறி ஜயவர்த்தன புற பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ராஜகீய பண்டித மெதக்கொட அபய திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளதுடன், சிங்கள பௌத்த நாடான இலங்கை மதங்களற்ற இராச்சியமாக பிரகடணப்படுத்தப்படவுள்ளது என்ற இனவாதக் கருத்தினை வெளிப்படையாகவே கக்கி உள்ளார். மீண்டும் முஸ்லிம் மக்கள் மத ரீதியான நெருக்கதல்களை எதிர்நோக்கும் நிலைமை தோன்றியுள்ளது. இத்தீய இனவாத சக்திகள் இலங்கையில் சமாதானம் நிலவக் கூடாது எனவும், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அமுல்படுத்தக்கூடாது எனவும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பான தவறான கருத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். புதிய அரசியலமைப்புக்கு தீ வைப்போம், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கோவணம் இல்லாமல் ஓட வேண்டிய நிலை வருமென பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரத்தேரர் எச்சரிக்கை செய்யும் நிலமையும் உருவாகியுள்ளது

நமது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இனவாதச் செயற்பாடுகளே பிரதான காரணமாக இருந்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ‘எனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான அநீதிகள் தன்மை மீறி நடைபெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இனவாதத்தை மூலதனமாக பயன்டுத்தி வரும் பொதுபலசேனா அமைப்பு பெறும் சக்தியாக காட்டப்பட்டது.அன்று ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்த போது பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொண்ட செயற்பாடுகளை இச்சபையிலே கண்டித்துள்ளேன். இனவாதத்தை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் இனவாதத்தினாலேயே அழிந்து விடுவார்கள் என்றும், நமது நாட்டில் வாழும் சிங்கள மக்கள் பொதுபலசேனா அமைப்பை நிராகரிப்பார்கள் என்றும் அன்று இச்சபையிலே தெரிவித்தேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை மக்கள் பொதுபலசேனா அமைப்பிற்கு எந்த அடிப்படையில் தங்களின் ஆதரவை வழங்கினார்கள் என்பதை யதார்த்த பூர்வமாக அறிந்து கொள்ள முடிந்தது.

பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இயங்கும் பொதுபலசேன அமைப்பையும் ஏனைய இனவாத அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் நமது நாட்டில் இனவாத செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி அவர்களும் அவரச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை ஏகமானதாக கோரிக்கை விட வேண்டும் என வேண்டுகிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்