தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை

🕔 February 9, 2016

Invitation - 012– ஆசிரியர் கருத்து –

சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் போல், தமிழ் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்களே ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இன்னொருபுறம், தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, நாட்டைப் பிரித்துக் கொடுத்த குற்றத்துக்கு ஒப்பானதொரு செயற்பாடு போல் காண்பிப்பதற்கு, சிங்கள இனவாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விடயமாக அதைப் பார்க்கும் பக்குவமும், அறிவும் நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் இங்கு வருத்தமான விடயமாகும்.

முதலாவது சுதந்திர தின தேசிய நிகழ்விலேயே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது என்கிற தகவல் நம்மில் பலருக்குத் தெரியாதது.

முதலாவது சுதந்திர தின தேசிய நிகழ்வு 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 ஆம் திகதி டொரிங்டன் சதுக்கத்தில் இடம்பெற்றது.  அந்நிகழ்வுக்கான அழைப்பிதழில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதங்கள் பாடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்க விடயமாகும்.

இருந்தபோதும், பின்னரான காலங்களில் சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில்,  தேசிய கீதம் தமிழில் பாடுகின்றமை இல்லாமல் போயிற்று.

அதனால்தான், பல தசாப்தங்களுக்குப் பிறகு – இம்முறை சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமையானது, பலரின் பார்வையில் ஆச்சரியமும் – அதிர்ச்சியுமான விடயமாக உள்ளது.

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் கண் கலங்கினார் என்று, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்தச் செய்தி எந்தளவு உண்மையானதெனத் தெரியவில்லை.

அப்படி அவர் கண் கலங்கியிருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை, காணாமல் போன தனது குழுந்தை, நீண்ட காலத்துக்குப் பிறகு தம்மை வந்து சேரும்போது பெற்றோர்கள் ஆனந்தப் பெருக்கோடு கண்ணீர் சிந்துவதில்லையா? சம்பந்தன் அப்படி கலங்கியிருக்கலாம்.

ஆனால், தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை தொடர்பில் உதய கம்மன்பில மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் கொலைவெறி கொள்வதில் எந்த நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேத்துவதற்காகத்தான் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட விடயத்தை, அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மேற்படி சிங்கள இனவாதிகள் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மஹிந்த மற்றும் உதய கம்மன்பில போன்றோரிடம் இனவாதத்தைத் தவிர்த்து அரசியல் செய்வதற்கு இப்போதைக்கு எதுவும் இல்லை என்பதுதான் யதாரத்தமாகும். அதனால்தான், அவர்களின் கையில் கிடைத்த இந்த விடயத்தை விவகாரமாக்கப் பார்க்கிறார்கள்.

அவ்வளவுதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்