முஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத்

🕔 September 13, 2018

ள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,  உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதி அமைச்சர் டொக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் அவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,
பஷீர் சேகு தாவூத் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் அடங்கலான இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஏனைய இன மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து உலக அளவில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற சூழலில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆகியவற்றுக்கு உள்ளே நடப்பது என்ன? என்று தெரியாமல் இவர்கள் அங்கலாய்க்கின்றார்கள். இவற்றுக்குள் இருந்துதான் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாக்கப்படுவதாக சந்தேகிக்கின்றனர்.

ஏனென்றால் இவற்றுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள் ஏனைய இன மக்களுக்கு மூடிய அறைக்குள் இடம்பெறுகின்ற மர்மங்களாகவே தோன்றுகின்றன. எனவே இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாட்டில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட வேண்டும். இதனோடு சேர்ந்ததாக இஸ்லாமிய நிறுவனங்கள் இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும்.

புதிதாக பள்ளிவாசல்கள் போன்றவை கட்டப்படுவது நல்ல விடயம்தான். ஆனால் இருக்கின்றவை பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் போன்றவை திருத்தி அமைக்கப்படுகின்றபோது அவற்றின் வரலாற்று தொன்மையும் அழிந்து விடாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் வரலாற்று தொன்மையை அழிந்து விடாமல் உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியவாறே அவர்களுடைய கட்டிட நிர்மாணங்களை திருத்தி அமைக்கின்றனர் என்கிற விடயம் முன்னுதாரணம் ஆகும்.

இதே நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய சக்திகள் இன அழிப்பு அரசியலை பல வடிவங்களிலும் கச்சிதமாக செய்து வருகின்றன. இதற்காக வரலாற்று எச்சங்களை கையகப்படுத்தியும், கைப்பற்றியும், அழித்தும் வருகின்றன. இதற்கு மிக நல்ல அண்மைய உதாரணம் சிவனொளிபாத மலை ஆகும். இது மூவின மக்களுக்கும் சொந்தமாக உள்ளது. முஸ்லிம்கள் பாவா ஆதம் மலை என்றும் தமிழர்கள் சிவனொளிபாத மலை என்றும் சிங்களவர்கள் ஸ்ரீபாத மலை என்றும் அழைத்து வருகின்ற நிலையில், இதை தனியொரு இனத்துக்கு உரித்தானதாக பிரகடனப்படுத்துவது அநியாயம் ஆகும்.

முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் அல்லர். இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்கிற செய்தியை ஏனைய இன மக்களுக்கு உறுதியாக எடுத்து காட்டுகின்ற ஆதாரங்களாக அல்லாஹ்வின் நேசர்களான அவுலியாக்களின் அடக்க ஸ்தலங்கள் காட்சி தருகின்றன. இந்நாட்டின் பல இடங்களிலும் பல பல நூற்றாண்டுகள் பழைமையான ஷியாரங்கள் உள்ளன. இவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவையும் நல்லிணக்க மையங்களாக முகிழ்க்க வேண்டும். சேர்மன் மீரா லெப்பை அவுலியா மையத்துக்கு தமிழ் சகோதரர்கள் தரிசனம் மேற்கொள்வதை நாம் எல்லோரும் மிக நன்றாகவே அறிவோம்.

ஏறாவூர் மண்ணின் மைந்தர் டொக்டர் பரீட் மீரா லெப்பை தலை சிறந்த புத்திஜீவியாக, உயர்ந்த கல்விமானாக, நிறைவான வாசகராக, வாதங்களை முன்வைப்பதில் வல்லுனராக, இன நல்லுறவுக்கான இணைப்பு பாலமாக, மகத்தான மக்கள் சேவையாளனாக விளங்கினார். இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்க கூடிய ஆளுமையாக மிளிர்ந்தார். எமது இளையோர் சமூகத்தில் இருந்து ஏராளமான பரீட் மீரா லெப்பைகள் வருங்காலத்தில் உருவாகுதல் வேண்டும்.

எமது மண்ணுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிய பெரியார்களை நாம் மறந்து விடவே கூடாது. அவர்களின் நினைவுகளை சுமந்தவர்களாக வாழுதல் வேண்டும். பரீட் மீரா லெப்பையின் வாழ்க்கை வரலாற்று நூல் நிச்சயம் எழுதப்பட வேண்டும். இவர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்நாளில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்