திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்

🕔 May 1, 2018

– அஹமட் –

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது.

அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை என்று, ஒருவர் மட்டுமே கடமையாற்றுகின்றார். கல்விக் கல்லூரியில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்த இந்த ஆசிரியை – சுமார் 08 மாதங்களுக்கு முன்னர், இந்த பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆம்பம் முதலே, இந்த ஆசிரியையிடம் ஹபாயா அணிய வேண்டாம் என்றும் சேலை அணிந்து வருமாறும் பாடாசலை நிருவாகத்தினர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை பாடசாலையின் முகாமைத்துவக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது, அந்தக் கூட்டத்துக்கு குறித்த ஆசிரியையை அழைத்த அதிபர்; “நீங்கள் பாடசாலைக்கு இனி ஹபாயா அணிந்து வரக் கூடாது, சேலைதான் அணிந்து வர வேண்டும். முடியா விட்டால், உங்களுக்கு விருப்பமான பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபராக செ. பத்மசீலன் என்பவர் கடமையாற்றுகின்றார்.

ஏற்கனவே, திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 05 முஸ்லிம் பெண் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தமைக்கு, அந்தப் பாடசலையின் நிருவாகமும், பாடசாலை சமூகத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தமையினை அடுத்து, குறித்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் ஹபாயாவுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments