மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு

🕔 February 12, 2018

ல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையினை மு.காங்கிரஸ் பெற்றுக் கொள்ளாததொரு நிலையிலேயே, இந்தக் கோரிக்கையினை மு.கா. தலைவர் விடுத்துள்ளார்.

சாய்ந்தமருதில் தான் அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு மதிப்பளித்தும், அங்குள்ள மக்களின் தெரிவுக்கு முக்கியத்துவமளித்தும் பள்ளிவாசல் நிருவாகத்தைக் கௌரவித்தும் கல்முனை மாநகரசபையில் மேயர் பதவியுடன் ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சைக் குழுவுக்கு நிபந்தனையற்ற ஆதரவையும், ஒத்துழைப்பினையும் மு.காங்கிரஸ் வழங்கும் எனவும் மு.கா. தலைவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசனுடைய வழிநடத்தலின் கீழ் களமிறக்கப்பட்ட மேற்படி தோடம்பழச் சின்னத்தையுடைய சுயேட்சைக் குழுவுக்கு எதிராக, சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கிய அத்தனை வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையிலேயே, மு.கா. தலைவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தேர்தல் காலத்தில், மேற்படி சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவாக சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாத்தினர் செயற்படுகின்றனர் என முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சாட்டியமையினை அடுத்து, சாய்ந்தமரு பள்ளிவாசலின் நிருவாகத்தினை வக்புசபை கலைத்து, விசேட நிருவாகத்தினை உருவாக்கியிருந்தது.

இருந்தபோதும், வக்புசபையின் அந்த முடிவுக்கு எதிராக, வக்பு சபை தீர்ப்பாயத்தில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் – மேன்முறையீடு செய்தமையினை அடுத்து, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகம் கலைக்கப்பட்டமை செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், சாய்ந்தமருது சுயேட்சைக் குழு 09 ஆசனங்களை வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்