மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

🕔 January 10, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், நூறானியா வட்டாரத்தில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சியான் ரபீக் என்பவருக்கு பதிலாக, மேலதிக அல்லது கள வேட்பாளர் எனும் பெயரில் யாரையும் நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு கூறி, யாராவது வாக்குக் கேட்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆனையாளர் திலின பண்டார தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்டோருக்கும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின பண்டாரவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பெரிய பள்ளியில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான நூறானியா வட்டார வேட்பாளர் ரபீக் என்பவர், குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில், அண்மையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மேற்படி ரபீக் என்பவருக்குப் பதிலாக, நூரானியா வட்டாரத்துக்கு, முன்னாள் அதிபர் அன்சார் என்பவரை ‘மேலதிக – கள வேட்பாளராக’ நியமித்துள்ளதாக, தேசிய காங்கிரசின் தலைவர் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அண்மையில் பொது கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வேட்பாளர் ஒருவருக்குப் பதிலாக இன்னுமொருவரை நியமிக்க முடியாது என்றும், தேசிய காங்கிரசின் தலைவர் பொய் பிரசாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் எனவும் கூறி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் இருவர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்தநிலையிலேயே, அக்கரைப்பற்று பெரிய பள்ளியில் மேற்படி சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது அங்கிருந்த ஒருவர்; “நூறானியா வட்டார வேட்பாளருக்குப் பதிலாக, வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றவர், நான்தான் இப்போது நூறானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்றும், எனவே – எனக்கு வாக்களியுங்கள் எனவும், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கிறார். இது சரியா” என, உதவித் தேர்தல் ஆணையாளரிடம் வினவினார்.

அதற்குப் பதிலளித்த உதவித் தேர்தல் ஆணையாளர்; “அது பிழையாகும். அப்படி வாக்குக் கேட்க முடியாது” என்றார்.

வீடியோ

Comments