உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

🕔 December 6, 2017

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன  முன்னணி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, தேசிய காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக போட்டியிட  சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பொதுஜன முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.

ஆயினும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் விரிவானதொரு கூட்டணியாக செயற்பட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இந்த நிலையில், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இணக்கம் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி; ஏனையோரின் தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்காது வன்முறைகளற்ற, சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை உறுதி செய்வதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் இத்தேர்தல் வெற்றியானது தேர்தல் அபேட்சகர்களின் மீதே தங்கியுள்ளது என்பதனால், கூட்டமைப்பின் சகல கட்சிகளும் நேர்மையான அரசியல் கொள்கைகளையுடைய அபேட்சகர்களை தமது கட்சி சார்பாக தேர்தலில் முன்னிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்