ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

🕔 December 4, 2017

– முன்ஸிப் அஹமட் –

திர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது.

கிழக்கு மாகாண முன்னார் சுகாதார அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில் மேற்படி மத்திய குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் மு.காங்கிரஸ் தனித்து, தனது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என, கட்சித் தலைமையை வலியுறுத்தும் வகையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்களித்தமைக்கிணங்க, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வழங்க வேண்டும் எனவும், கட்சித் தலைமையை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, அங்கு சமூகமளித்திருந்த மத்திய குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; கட்சியின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பலிகொடுத்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை கட்சித் தலைமை உடனடியாகக் கைவிட வேண்டும் எனக் கூறினார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுமானால், அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்கு தாம் தயார் இல்லை என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டதில் முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.ஏ. வாஹிட், உயர் பீட உறுப்பினர் றியா மசூர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்