இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு

🕔 June 12, 2015

Hakeem - 099ரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிறுபான்மை மற்றும் சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை மாலை, பத்தரமுல்லை ‘வோட்டரஸ் ஏஜ்’ ஹோட்டலில் அவசரமாக ஒன்று கூடி, புதிய தேர்தல் சீர் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இந்த ஒன்று கூடலை, மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்தார்.

மேற்படி 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் – அக்கட்சிகளின் சார்பாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

18 அரசியல் கட்சிகள் அவசரமாகக் கூடி – தேர்தல் சீர்திருத்தம் பற்றி தீவிரமாக ஆராய்ந்திருக்கின்றோம். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் – புதிய தேர்தல் திருத்தச் சட்ட நகல் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போது, அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கிணங்க, நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தங்களுடன் கூடிய புதிய வரைபொன்று முன்வைக்கப்படவுள்ளது.

அந்த வரைபின் பிரதியினை, நாம் இன்று (வியாழக்கிழமை) ஆராய்ந்தோம். அதற்கிணங்க, வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்பட்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை ஆதரிக்க முடியாது என்கிற தீர்க்கமான தீர்மானமொன்றுக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். அதுபற்றி  சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதிதுவப்படுத்தும் 18 கட்சிகளும், சிறிய கட்சிகளும், ஊடகங்களினூடாக இந்த அறிக்கையினை விடுகின்றோம்.

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், இது பற்றி பேசுவதற்கு – இந்தக் கட்சிகள் எமக்கு ஆணை வழங்கியுள்ளன.

முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் நடத்தப்படும். இதற்கிணங்க, குறித்த தேர்தல் தொகுதியில் – யார் வெற்றி பெற்றவர் எனத் தீர்மானிக்கப்படும். இதன் பின்னர், அதே வாக்கைக் கொண்டு, விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ், கட்சிகள் பெறுகின்ற ஆசனங்களும் தீர்மானிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தல் முறையில் தவறுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை விட, வெற்றி பெறுவதற்கு சாத்தியமான வேட்பாளருக்கே வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கமாகும். எனவே, இதனால் – இரண்டு பலமான கட்சிகளும், நியாயமற்ற முறையில், தொகுதியில் அக் கட்சிகளுக்குரிய வாக்குப்பலத்துக்கு முரணான வகையில் நன்மையடையும் வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன், இந்த வாக்கை வைத்து – பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர், மாவட்ட மற்றும் தேசிய விகிதாசார பிரதிநிதித்துவங்கள் தெரிவு செய்யப்படும். இன்போதும், பிரதான கட்சிகளை தவிர்ந்த – ஏனைய கட்சிகள், இரண்டாவது முறையாகவும் பாதிக்கப்படப் போகின்றன.

ஆகவேதான், இவ்வாறான தேர்தல் முறை நடைமுறையிலுள்ள ஏனைய நாடுகளில் – இரண்டு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. அதனால், பிரதான கட்சிகளுக்குப் புறம்பாக, குறைந்த பட்சம் – தாம் விரும்பும் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்த முடியும். இதன் மூலம், சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தைப் பெறலாம். இரட்டை வாக்குச் சீட்டு வழங்கப்படாத பட்சத்தில், உண்மைனயான தேர்தல் பெறுபேறுகள் திரிவுபடுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இதனால் வாக்காளர்களின் உண்மையான மனேநிலை பிரதிபலிக்கப்படுவதற்கு இடமில்லாமல் போகின்றது.

உத்தேச தேர்தல் திருத்தத்தில் காணப்படும் அடிப்படைத் தவறு காரணமாக, நாங்கள் அதனை எதிர்க்கிறோம். புதிய தேர்தல் திருத்தத்திலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய அம்சங்களை பரிசீலிப்பதற்கு முன்னர், இரட்டைவாக்குச் சீட்டு யோசனையை ஏற்றுக் கொள்ளுமாறு கோருகின்றோம்” என்றார்.

இதன்போது, அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸனலி, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம். சந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், ஆர். யோகராஜன், செல்வம் அடைக்கலநாதன், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஜெ. சிறிதுங்க, அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், எஸ். அருள்சாமி, எஸ். குகவரதன், நிசாம் காரியப்பர், குமரகுருபரன், சரத் அத்துகொரல்ல ஆகியோர் உட்பட 18 கட்சிகளின் சார்பான பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர். Hakeem - 091

Comments

புதிது பேஸ்புக் பக்கம்