சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம்
வீட்டுக் கூரையின் மரக்குற்றி உடைந்து தலையில் விழுந்தமை காரணமாக, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்ததாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனத் ஜயவீர தெரிவித்தார்.
ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கெஸ்பாவ பகுதியிலுள்ள மானவடுவின் வீட்டுக் கூரையில் இருந்த மரக்குற்றி ஒன்று உடைந்து அவரது தலையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டதாக, குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது தலைப்பகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்து விட்டார் என்று கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த ராணுவப் பிரிவுக்கு சுமித் மானவடு தலைமை தாங்கியிருந்தார்.
மேஜர் ஜெனரல் மானவடு போர் இடம்பெற்ற காலத்தில் எறிகணைப் படைப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், ராணுவ விளையாட்டுப் பிரிவு பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.