ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

🕔 May 5, 2016
கோப்புப் படம்

கோப்புப் படம்

ங்களாதேஷ் பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் பாலியல் பலாத்காரம், புலனாய்வு அதிகாரிகளை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிஜாமி மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்மையினால் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ல் அறிவித்திருந்தது.

அதனை எதிர்த்து நிஜாமி – மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான 04 நீதிபதிகள்  மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

இதன்போது, “மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது” என்று ஒற்றை வரியில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே நிஜாமுக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.

எனவே, மொடியூர் ரஹ்மான் நிஜாமி மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான சந்தர்பம் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்