பழமையின் ருசி

🕔 April 11, 2016

Article - 79 - 01
– மப்றூக் –

‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர் மரணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன.

‘பொல்லடி’ என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும். முன்னொரு காலத்தில் கிராமங்களில் நிகழும் திருமணங்கள், கத்னா நிகழ்வுகள் மற்றும் விழாக்களின் போது பொல்லடி இடம்பெறும். குறிப்பாக, வைபவங்களுக்கு வருகை தரும் அதிதிகள் பொல்லடித்தே வரவேற்கப்படுவார்கள். ஆனால், இப்போது பொல்லடி எனும் இந்தக் கலை வடிவம் கிட்டத்தட்ட அருகி விட்டது. பொல்லடி என்றால் இப்போதைய தலைமுறையினரில் பலருக்குத் தெரியாது. அடுத்த தலைமுறையினருக்கு நாம் கதைகளிலும், காட்சிகளிலும் மட்டுமே பொல்லடியினை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு சமூகத்தினதும் கலை, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைமைகள்தான் அந்தந்த சமூகங்களின் வரலாற்று அடையாளங்களாக உள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக நமது அடையாளங்களில் அதிகமானவற்றினை நாம் தொலைத்து விட்டோம். அவற்றினை நாம் நினைவில் கூட வைத்திருப்பதில்லை. ஆகக்குறைந்தது, கால் நூற்றாண்டுக்கு முன்னர், நமது மக்களின் பயன்பாட்டிலிருந்த பொருட்களைக் கூட நாம் மறந்து விட்டோம். பழமையின் ருசி நம்மில் அதிகமானோருக்குத் தெரியவில்லை.

தனது பழமைகளையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு சமூகமும் வரலாற்றில் இடம்பெற முடியாது. நமது வாழ்க்கை முறைமைகள் குறித்து, நமது அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

நமது பயன்பாட்டிலிருந்து மறைந்து போனவை குறித்து யோசித்துப் பார்த்த போது, ஏராளமானவை நினைவுக்கு வந்தன. அவற்றினை மேலோட்டமாகப் பதிவு செய்வதும், பழமையின் ருசியினை நினைவுபடுத்திப் பார்ப்பதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொன் எழுத்துப் பீங்கான்Pon elutthup peenkaan - 01

இந்த வகைப் பீங்கானை எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அனேகமாக வீடுகளில் சாப்பாட்டின்போது, குடும்பத் தலைவருக்கான பீங்கானாக இது பயன்பட்டது. பொன் எழுத்துப் பீங்கான் வெளிநாட்டு உற்பத்தியாகும். இந்தப் பீங்கானிலுள்ள எழுத்துக்களும், கணிசமான அலங்கார வேலைப்பாடுகளும் பொன் நிறத்தில் இருக்கும். வெளிநாட்டுப் பொருட்களின் பயன்பாடு – நாட்டில் மிகவும் குறைவாக இருந்த ஒரு காலகட்டத்தில், பொன் எழுத்துப் பீங்கான் பயன்பாட்டில் இருந்தது. குறிப்பாகச் சொன்னால், வீடுகளில் தந்தைமார் இந்தப் பீங்கானில்தான் உணவருந்துவார்கள். தந்தையர்களின் பீங்கானில் மற்றவர்கள் சாப்பிட மாட்டார்கள். அது தந்தையர்களுக்கான கௌரவமாக இருந்தது.

திருமணம் முடித்த புது மாப்பிள்ளைகளுக்கும், கிராமங்களில் பொன் எழுத்துப் பீங்கானில்தான் உணவு பரிமாறப்படுவதுண்டு என்கிறார் மூத்த கவிஞர் கலாபூஷணம் அன்புடீன். மாப்பிள்ளையாக பொன் எழுத்துப் பீங்கானை உபயோகப்படுத்தத் துவங்கும் ஆண்கள், தமது வாழ்நாள் முழுக்க வீட்டில் அந்தப் பீங்கானை உயயோகப்படுத்துவார்கள் என்றும் அன்புடீன் விவரிக்கின்றார்.

இப்போது, இந்த வகைப் பீங்கான் புழக்கத்தில் இல்லை. பொன் எழுத்துப் பீங்கான் பற்றி நமது இளைஞர்களில் பலருக்குத் தெரியாது. ஒவ்வொரு வீட்டிலும் நமது தந்தையர்களுக்கான கௌரவமாக இருந்த – அந்த பொருள் பற்றி நாமும் மறந்து விட்டோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள அரும்பொருட் காட்சியகத்துக்கு ஒரு தடவை சென்றபோது, பொன் எழுத்துப் பீங்கானை காணக்கிடைத்தது. வாழ்வின் ஏராளமான தருணங்களை அந்த வெற்றுப் பீங்கான் நினைவுபடுத்தியது.

மிதிவடிக் கட்டைMithivadik kaddai - 01

‘சாஹுல் ஹமீது மாமா’ என்று எங்களுக்கு மூத்த தலைமுறையினரால் அழைக்கப்பட்ட எங்களுர் பெரியவர்தான் மிதிவடிக் கட்டை என்றவுடன் என் நினைவுக்கு வருகிறார். அவர் ஒரு – நாட்டு வைத்தியர். கண் நோய்களுக்கு வைத்தியம் செய்வதில் புகழ் பெற்றவர். தனது வைத்தியத்துக்காக ஒரு சதத்தையேனும் அவர் கூலியாகப் பெற்றது கிடையாது. நான் அறிய, எங்கள் பகுதியில் மிதிவடிக் கட்டை அணிந்து நடந்த கடைசி மனிதர் அவர்தான். அவரின் மிதிவடிக் கட்டை எழுப்பும் ‘டக் டக்’ சத்தம் இன்னும் நினைவில் இருக்கிறது.

மிதிவடிக் கட்டை என்பது – நாம் அணிகின்ற பாதணிகள்தான். ஆனால், மரத்தினால் செய்யப்பட்டவை. ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் தமக்கான பாதணிகளை மரத்தினால் செய்துதான் அணிந்திருக்கிறார்கள். சிலர் தமக்கான பாதணிகளை, மரக்கட்டைகளைப் பயன்படுத்தி, தாமே செய்திருக்கின்றார்கள். மிதிவடிக் கட்டைகளுக்கு பல்வேறு வர்ணங்கள் பூசப்படும். எங்கள் பகுதியில் மிதிவடிக் கட்டையினைப் பயன்படுத்திய தலைமுறையின் கடைசி மனிதர் சாஹுல் ஹமீது மாமாவாகத்தான் இருந்தார். அவரின் மரணத்துடன் எங்கள் பகுதியில் ஒலிக்கும் மிதிவடிக் கட்டையின் ‘டக் டக்’ ஓசை மறைந்து போயிற்று. அவருடன் மிதிவடிக் கட்டையும் எங்கள் பகுதியில் இல்லாமலானது.

மிதிவடிக் கட்டைகள் பயன்பாட்டிலிருந்த காலங்களில், அதனை எல்லோரும் பயன்படுத்துவதில்லை என்கிறார் கவிஞர் கலாபூஷணம் அன்புடீன். சமூகத்தில் வசதியானவர்களும், உயர்வானவர்களாகக் கருதப்பட்டவர்களுமே மிதிவடிக் கட்டைகளைப் பயன்படுத்தியதாக அவர் கூறுகின்றார். மிதிவடிக் கட்டை என்கிற பாதணிகள் – மிடுக்கினையும், உயர் தரத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் அப்போதைய காலகட்டங்களில் அணியப்பட்டுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பிரதிப் பதிவாளரும், எழுத்தாளருமான மன்சூர் ஏ. காதருடன் இந்தக் கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய சொந்த ஊரான சம்மாந்துறையில், மிதிவடிக் கட்டை அணிந்தவர்கள் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சம்மாந்துறையில் மிதிவடிக் கட்டை அணிந்தவர்களில் அமீர் அலி பிரபலமானவர் என்கிறார் மன்சூர் ஏ. காதர். சம்மாந்துறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மறைந்த எம்.ஏ. அப்துல் மஜீத்தீன் இளைய சகோதரர்தான் அமீர் அலி என்பவர். இவர் சம்மாந்துறை பட்டிணசபையின் தலைவராகப் பதவி வகித்தவர்.

மிதிவடிக் கட்டைகளின் அடிப் பகுதியில் இரும்புத் தகட்டினை பொருத்துவதுண்டு என்கிற தகவலையும் மன்சூர் ஏ. காதர் நம்மிடம் கூறினார். மிதிவடிக் கட்டை தேய்ந்து போகாமலிருக்க இப்படிச் செய்வார்களாம். இரும்புத் தகட்டினை மிதிவடிக் கட்டையின் அடிப் பகுதியில் பொருத்துவதற்கு, ‘லாடம்’ அடித்தல் என்று பெயர். வண்டில்களை இழுக்கும் மாடுகளின் காற் குளம்புகள் தேய்வடையாமல் இருப்பதற்காகவும், குளம்புகளின் அடிப் பகுதியில் – இரும்புத் தகடுகள் பொருத்தப்படுவதுண்டு. அதையும் லாடம் அடித்தல் என்றுதான் சொல்வார்கள்.

அரைக்கான்Araikkaan - 01

அரைக்கான் என்பது, வலையினால் செய்யப்பட்ட ஒரு வகை சிறிய சுருக்குப் பையாகும். அறுணாக் கயிறு அல்லது அறுணாக் கொடியுடன் அரைக்கானை கோர்த்து இடுப்பில் கட்டுவர். அனேகமாக, பயணங்களின் போது பணத்தினை அரைக்கானில் மறைத்து வைப்பார்கள்.

மீனவர் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள்தான் அரைக்கானை அதிகம் உபயோகிப்பார்கள். இடுப்பில் அறுணாக் கொடியுடன் கோர்த்துக் கட்டப்பட்டிருக்கும் அரைக்கானின் வாய்ப் பகுதியை திறந்து – அதனுள் காசை வைத்து விட்டு, அறுணாக் கொடியினை இழுத்து விட்டால், அரைக்கானின் வாய்ப்பகுதி இறுகி மூடி விடும்.

என்னுடைய சிறு வயது பாடசாலைக் காலத்தில், எனது வயதையொத்த சில நண்பர்கள் அரைக்கான் அணிந்து வரக் கண்டிருக்கிறேன். அவர்கள் அதற்குள் சில்லறைக் காசினை வைத்திருப்பார்கள். பெரியவர்கள் தாள் காசுகளையும் அரைக்கானுக்குள் வைத்திருப்பார்கள். தாள் காசுகளை எவ்வளவுக்கு முடியுமோ, அவ்வளவு சுருட்டி சிறிதாக்கி, அதனை அரைக்கானுள் போட்டு வைப்பார்கள்.

இப்போது, அரைக்கான் பற்றிய நினைவுகள் மட்டுமே உள்ளன. தென்கிழக்குப் பல்கலைக்கழக அரும்பொருட் காட்சியகத்தில் அரைக்கானைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதனைக் கண்டபோது, உடனடியாக அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை. சிரமப்பட்டு நினைவுபடுத்திக் கொண்டேன். அரைக்கான் அணிந்து வரும், சின்ன வயது நண்பர்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். அவர்களின் முகங்கள் தெளிவின்றி நினைவுகளுக்குள் தலை காட்டிச் சென்றன.

அலமுடிAlamudi - 01

பெண் குழந்தைகளின் நிர்வாணத்தினை மறைப்பதற்கு பயப்படுத்தப்பட்ட ஓர் ஆபரணத்தின் பெயர்தான் அலமுடி. பெண் குழந்தைகளின் இடுப்பிலுள்ள அறுணாக் கயிற்றினுடைய முன் பகுதியில் அலமுடியினைக் கொழுவி விடுவார்கள். பிள்ளைகள் ஆடையின்றித் திரியும் போதும், அவர்களின் அம்மணம் அலமுடியால் மறைக்கப்படும்.

செப்பு உலோகத்தினால் செய்யப்பட்ட அலமுடிகள்தான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தன. அலமுடிகள் – வெற்றிலை வடிவத்தினைக் கொண்டவை. அவற்றில் பல்வேறு விதமான அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

அலமுடிகள் வெகு காலத்துக்கு முன்பாகவே வழக்கொழிந்து போய் விட்டன.

சேவரக்கல்Sevarakkal - 01

மண மகனும், மண மகளும் மணவறையில் அமர்வதற்கான இருக்கையாக சேவரக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. செம்பினால் செய்யப்பட்ட சேவரக்கல்லில் மணமக்கள் பயன்படுத்தும் குவளைகள் மற்றும் பீங்கான்கள்களையும் வைப்பார்களாம். 19 ஆம் நூற்றாண்டில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. சேவரக்கல்லினை யாராவது பயன்படுத்தியதை நீங்கள் கண்டுள்ளீர்களா என்று மூத்த கவிஞர் அன்புடீனிடம் கேட்டோம். ‘இல்லை’ என்றார்.

பல தசாப்தங்களுக்கு முன்பாகவே சேவரக்கல் நம்மவர்களின் பயன்பாட்டிலிருந்து காணாமல் போய்விட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக அரும்பொருட் காட்சியகத்தில் சேவரக்கல் ஒன்று பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனைக் காணக் கிடைத்தபோது, நமது கமராவில் பதிவு செய்து கொண்டோம்.

மரைக்கால்Maraikkaaal - 01

நெல் மற்றும் அரிசி போன்ற தானியங்களை அளவீடு செய்வதற்கான உபரணமாக மரைக்கால் பயன்படுத்தப்பட்டது. ஒரு மரைக்கால் நிறைய நெல்லை நிரப்பி அளந்து கொடுப்பார்கள். 12 மரைக்கால் நெல் – ஒரு மூடையாகும்.

மரைக்கால் ஆரம்பத்தில் மரத்தினால் உருவாக்கப்பட்டதாக இருந்தது. எல்லோரிடத்திலும் மரத்தால் செய்யப்பட்ட மரைக்கால் இருந்ததில்லை. மரத்தால் செய்யப்பட்ட மரைக்காலினைச் சுற்றி, பட்டி போன்ற செப்புத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். மரைக்கால் சேதமடையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு அப்படிச் செய்தனர். மரத்தால் செய்யப்பட்ட மரைக்காலுக்கு நல்ல பெறுமதி.

பிற்காலங்களில் தகட்டினால் உருவாக்கப்பட்ட மரைக்கால்கள்தான் அதிகமாக பாவனையில் இருந்தது. எடை பார்க்கும் இயந்திரங்களின் வருகையின் பிறகு, மரைக்கால் என்பதே இல்லாமல் போயிற்று.

எங்கள் வீட்டிலும், மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மரைக்கால் இருந்தது. கண்காட்சி ஒன்றில் பயன்படுத்தி விட்டுத் தருகிறோம் என்று கூறி, அதனை வாங்கிக் கொண்டு போனார்கள்.

கடைசிவரை, அந்த மரைக்கால் திரும்பவேயில்லை.

இப்படி, நமது மூதாதையர்களின் பாவனையிலிருந்த எத்தனையோ பொருட்களும், வழங்கங்களும் தொலைந்து போய் விட்டன. அவற்றினைத் தேடிப் பார்க்கும் ஆர்வம் நமது தலைமுறையினரிடம் இல்லை. பழசையும், பழமையினையும் ஒன்றென்று நமது இளைய தலைமுறையினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

குப்பையில் வீசப்படும் கிழிந்து போன பழைய துணிகளுக்கும், நமது பழமைகளுக்கும் பெறுமானம் ஒன்றுதான் என்று, நமது இளைய சமூகம் கருதுகிறது.

கணிணிகளின் தோள்களில் கைபோட்டுக் கொண்டு உலவும் இந்த நவீன யுகத்தில், பழமை பற்றிப் பேசுவது, வெட்கக் கேடான விடயம் போல் ஆகி விட்டது.

பழமையின் ருசி பற்றி, நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், பழமைகளை அவர்கள் நேசிக்கத் தொடங்குவார்கள்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (07 ஏப்ரல் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்