சொந்த தேவைக்கு அரசாங்க விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில், பஷிலிடம் விசாரணை
பஷில்ராஜபக்ஷ அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சொந்த பிரயாணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தினார் எனும் முறைப்பாடு தொடர்பில், நேற்று வெள்ளிக்கிழஙமை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பஷில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான போது, சுமார் 05 மணிநேரம் அவரிடம் மேற்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை, சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பஷில் ராஜபக்ஷவிடம் இதன்போது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட மேற்படி பயணங்களுக்காக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 15 கோடி ரூபாவினை செலுத்தியுள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேபோன்று 250க்கும் அதிகமான ராணுவ வீரர்களை தமது பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்றுக் காலை 10 மணியளவில் வருகை தந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிற்பகல் 3.30 மணிவரையில் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
நேற்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பஷில்ராஜபக்ஷ, நாட்டின் நிலைமைகளை அவதானிக்கும் போது எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி செயற்படவேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகளே என்னை அரசியலில் ஈடுபடத் தூண்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.