தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

– அஷ்ரப் ஏ சமத் –
வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தென்பகுதியிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனா்.
வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தினை ஏற்படுத்தும் பொருட்டு, தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியாலாளா்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகி தினங்களில் வட மாணத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர். இவர்களுடன் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.
இதன்போதே, வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் கையெழுத்திட்டனர். மேற்படி தூபியினை யாழ் சுதந்திர ஊடகவியலாளா்கள் நிர்மாணித்துள்ளனர்.
இந்த நிலையில், தென்பகுதி ஊடகவியலாளர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமையிரவு, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இச் சந்திப்பில் ஊடக அமைச்சா் கயந்த கருணாதிலக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களில் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர், சிலர் காணாமல் போயுள்ளனர். ஆணைக்குழு ஒன்றினை அமைத்து இவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அத்தோடு மேற்படி ஊடகவியலாளா்களுக்க நிவாரணம், பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிடிக்கை எடுக்க வேண்டும் என, ஊடக அமைச்சரிடம், வடமாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு, வடக்கு நிலைவரங்களை ஊடகங்கள் மூலம் நல்லிணக்க அடிப்படையில் சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதற்கு தெற்கு ஊடகவிலாளர்கள் உழைக்க வேண்டும். வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் நியாயமான முறையில் வெளிக்கொணரப்படல் வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறினார்.