மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

🕔 March 16, 2016

Article - 75 - 01
மு
ஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த யுத்தத்தில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும், இந்த யுத்தத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றி, சற்றே விரிவாக அலசுவது காலப் பொருத்தமாகும்.

போர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒரு பக்கமாகவும், அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் இன்னொரு பக்கமாகவும் இருந்து கொண்டு, இந்த யுத்த களத்தில் பொருதுவதற்குத் தயாராக உள்ளதாக அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமின் விசுவாசியாக கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை அறியப்பட்டவர் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி. மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் காலத்தில், ஆக உச்ச பட்சமாக அமைச்சரின் இணைப்பாளர் என்கிற பதவியை மட்டுமே வகித்திருந்த ஹசனலிக்கு, இரண்டு தடவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர், மு.காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம். இந்த நிலையில், மூன்றாவது தடவையாகவும் தனக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்று ஹசனலி எதிர்பார்த்தார். ஆனால், ஹக்கீமிடமிருந்து அதற்கான சமிக்ஞைகள் எவையும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதனால், ஹக்கீமுடன் ஹசனலி முறுகிக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் இந்த முறுகல், ஹக்கீமுக்கு எதிரான பனிப்போராக மாறியது. இதனால் கோபமடைந்த ஹக்கீம், மு.காங்கிரசில் ஹசனலி வகித்துவந்த செயலாளர் பதவியின் அதிகாரங்களைப் பிடுங்கியெடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீட செயலாளர் பதவியினை வகிப்பவரிடம் ஒப்படைத்தார். இதன் பிறகு, ஹசனலியின் கோபம் இரட்டிப்பாகியது. பனிப்போர் – நேரடி யுத்தமாக மாறத் துவங்கியது.

மு.காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் – கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவருடன் அடிக்கடி முரண்பட்டுக் கொள்பவர். ஆனால், இருவருக்கும் இடையில் தவிர்க்க முடியாத ஒரு நட்பு இருந்தது. மு.காங்கிரசுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பஷீருக்கு மூன்று தடவை ஹக்கீம் கொடுத்தார். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற பஷீர், இனிமேல் கட்சிக்குள் தான் ஒருபோதும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர் பதவியினைக் கோரப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பஷீர் போட்டியிடவில்லை. இப்போது, முஸ்லிம் காங்கிசுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல்களில் ஒன்றினை தனக்கு வழங்க வேண்டுமென பஷீர் வேண்டி நிற்கிறார். ஆனால், பஷீருடைய கோரிக்கைக்கும் மு.கா. தலைவர் ஹக்கீம் பச்சைக் கொடி காட்டியதாகத் தெரியவில்லை. இதனால், ஹக்கீம் மீது உச்சபட்ச கோபத்திலுள்ள பஷீர் சேகுதாவூத், இப்போது ஒரு நேரடி யுத்தத்துக்குத் தயாராகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயத்தம்

மு.காங்கிரசின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி பாலமுனையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், தேசிய மாநாடு நடைபெறவுள்ள பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், கடந்த சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மு.கா. தலைவரின் அந்த உரையானது, ஒரு யுத்தத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தம் போல் இருந்ததாக கட்சியின் உயர் மட்டத்தவர்கள் சுட்டிக்காட்டினர்.

‘முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும்’ என்று அந்த உரையில் ஹக்கீம் கூறினார். ‘இவ்வாறான நிலைவரத்தினை மு.காங்கிரசின் தலைமை தடுக்க முயற்சிக்கும் போது, தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார். கட்சியின் செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவரையும் மனதில் வைத்துக் கொண்டுதான், ஹக்கீம் இதனைக் கூறினார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

தாக்குதலுக்கான கருவிகள்

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, பாரதூரமான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாக அண்மைய நாட்களில் பேச்சுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. மு.கா. தலைவரின் தனி மனித பலவீனங்களையும், அவரின் வாழ்வில் நிகழ்ந்த சில தனிப்பட்ட விவகாரங்களையும் அம்பலப்படுத்துவதன் மூலம், அவரைப் பழிவாங்குவதற்குத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. இந்தத் திட்டத்துக்குத் தலைமை தாங்குகின்றவர்களின் பெயர்களும் காற்றோடு கதையாக வெளியாகி உள்ளன.

இன்னொருபுறம், மு.கா. தலைவருக்கு எதிராக ஒரு எழுத்து மூல ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மு.காங்கிரசின் உயர்பீடத்தில் உள்ளவர்களிடம் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.

இதையெல்லாம் அறிந்து கொண்ட பின்னர்தான், பாலமுனையில் ரஊப் ஹக்கீம் அப்படிப் பேசியதாக கட்சியின் உயர் மட்டத்தவர்கள் கூறினார்கள்.

மு.காங்கிரஸ் தலைவருக்கு எதிராக தயார் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடமிருந்து கையொப்பம் பெறும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தலைகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்தத் தலைகளுக்கு சம்மாந்துறை, காலி, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைத் சேர்ந்த சில உயர்பீட உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில், ஹக்கீமுக்கு எதிரான ஆவணத்தினைத் தயார் செய்த தலைகளில் ஒருவர், சாய்ந்தமருதைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர் ஒருவரிடமும் சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரின் கையொப்பத்தினைக் கோரி இருக்கின்றார். ஆனாலும், சாய்ந்தமருது உயர்பீட உறுப்பினர் அதற்கு மறுத்து விட்டதாக அறிய முடிகிறது.

அரசியல் என்பது அரசியலாக மட்டுமே இருக்க வேண்டும். ஓர் அரசியல்வாதி அவரின் அரசியல் நடத்தைகளினூடாகவே விமர்சிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த நல்லொழுக்கம் இப்போது பெரும்பான்மையானோரிடத்தில் இல்லாமல் போய்விட்டது. சக அரசியல்வாதிகளைத் தாக்குவதற்கான கருவியாக, அவரின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சில விவகாரங்களை, மற்றைய அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொள்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கொண்டு கல்லெறிவதை விடவும் இது பேராபத்தானதாகும்.

புறக்கணித்தல்

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் கட்சியின் செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்து கொள்ளாமல், தமது புறக்கணிப்பினை வெளிப்படுத்தவுள்ளனர் என்று ஊடகங்களில் இப்பொழுதே செய்திகள் வெளிவரத் துவங்கிவிட்டன. இன்னொருபுறம், ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோரை தேசிய மாநாடு தொடர்பான விடயங்களில் ரஊப் ஹக்கீம் ஓரம்கட்டியுள்ளதாகவும் எழுதப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹக்கீம் பதிலளிக்கையில்ளூ ‘அது தவறான செய்தியாகும். மு.காங்கிரசின் தேசிய மாநாடு தொடர்பான சில பொறுப்புகள் ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

இதேவேளை, ‘மு.காங்கிரசின் தேசிய மாநாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அல்லது அதனைப் புறக்கணிக்கும் வகையில் கட்சிக்காரர்கள் யாராவது நடந்து கொள்வார்களாயின், அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹக்கீம் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில்’ கூறினார்.

மு.காங்கிரசின் மேற்படி தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளாமல், அந்த நிகழ்வினை ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோர் புறக்கணிப்பார்களாயின், அதை வைத்தே அவர்களுக்கெதிராக மு.கா. தலைவர் ஹக்கீம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. மு.காங்கிரசின் உயர்பீடம்தான் அந்தக் கட்சி தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றும் அதியுயர் சபையாக உள்ளது. இதில் மொத்தமாக 90 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஆதரவானவர்கள். ஆக, ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையொன்றினை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குரிய பலம் ஹக்கீமிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்களெல்லாம் ஹசனலி மற்றும் பஷீருக்குத் தெரியாததல்ல. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டும், ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்துப் பயங்கொள்ளாமல் கட்சியின் தேசிய மாநாட்டினை அவர்கள் பகிஷ்கரிப்பார்களாயின், ஹக்கீமை அடக்குவதற்கான கருவிகள் தம்மிடம் உள்ளதாக அவர்கள் இன்னும் நம்புகின்றனர். அல்லது கட்சியிலிருந்து விலகுவதற்கு அவர்கள் தயாராகி விட்டனர் என்றுதான் அனுமானிக்க வேண்டியுள்ளது.

அதாஉல்லாவின் பாத்திரம்

அண்மையில், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை, அவரின் வீட்டில் வைத்து மு.கா.வின் செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதன்போது, ‘கட்சியை விட்டு விலகி நின்று, ஹக்கீமுக்கு எதிராக எதையும் செய்து விட முடியாது’ என்று அதாஉல்லா கூறியதாகவும், கட்சிக்குள் இருந்து கொண்டு ஹக்கீமை எதிர்க்குமாறு ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோருக்கு அதாஉல்லா ஆலோசனை வழங்கியதாகவும் அறியக் கிடைக்கிறது. ஆயினும், இந்த சந்திப்புக் குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா – மு.காங்கிரசின் தவிசாளராக இருந்தவர். அந்தக் கட்சிக்குள் ஹக்கீமுக்கு எதிராக இடம்பெற்ற மிக முக்கியமான சதிப்புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். வெளிநாட்டில் ஹக்கீம் இருந்த ஒரு சமயமாகப் பார்த்து, அவரின் தலைமைப் பதவியைக் கழற்றியெடுத்து, தன்வசப்படுத்திக் கொண்டவர். ஆனாலும், இறுதியில் அந்த நடவடிக்கை தோற்றுப் போக, வேறு கட்சி தொடங்கி அரசியல் நடத்திச் சென்றார். ஆயினும், இறுதியில் மு.காங்கிரசை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போய், எதுவித பதவிகளுமின்றி அதாஉல்லா தனித்து நிற்கின்றார்.

பலங்களும் – பலவீனங்களும்

ஹக்கீமை அடக்குவதற்கான கருவிகள் தம்மிடம் உள்ளதாக பஷீர் மற்றும் ஹசனலி ஆகியோர் நம்பிக்கொண்டிருந்தால் கூட, அவற்றினால் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் எவற்றினையும் மு.கா. ஆதரவாளர்களிடையே ஏற்படுத்தி விட முடியாமல் போகும் என்பதுதான் கள நிலைவரமாகும். இன்னொருபுறம், ஹக்கீம் பற்றிய பாரதூரமான தகவல்களை பஷீர் மற்றும் ஹசனலி ஆகியோர் வெளியிடும்போது அவற்றுக்குப் பெறுமானம் இல்லாமல் போய்விடும். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைக்காத கடுப்பில், ஹக்கீம் மீது அவர்கள் அவதூறு சொல்வதாக மக்கள் கூறத் தொடங்குவார்கள்.

எவ்வாறாயினும், மு.கா. தலைவர் ஹக்கீம் – தனக்கு எதிரான மேற்படி யுத்தத்தினை எதிர்கொள்வதற்கு, தயாரானதொரு மனநிலையில் உள்ளார் போலவே தெரிகிறது. இல்லாவிட்டால், ‘பிரச்சினை வேண்டாம்’ என்று கூறிவிட்டு, ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஆரம்பத்திலேயே கொடுத்து விட்டுப் போயிருப்பார்.

இந்த யுத்தத்தில் ஹக்கீமுக்கு எதிரான தரப்புகள் அனைத்தும், மீளவும் ஒருமுறை ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

களத்தில் நின்று பொருதுகின்றவர்களின் மானங்கள்கள்தான் இந்த யுத்தத்தில் பரஸ்பரம் குறிவைத்துத் தகர்க்கப்படும்.

ஆனாலும், அதை ‘தர்ம யுத்தம்’ என்றுதான் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (15 மார்ச் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்