தலைப்புச் செய்திகள்

பஸ் – ரயில் ஹபரதுவ பகுதியில் மோதியதில், 10 மாணவர்கள் காயம்

கொக்கல, ஹபரதுவ பகுதியிலுள்ள ரயில்வே கடவையில் இன்று (25) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, ரயிலுடன் மோதியதில் குறைந்தது 10 மாணவர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த சுமார் 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள், சிகிச்சைக்காக கராபிட்டிய மற்றும் உனவடுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்கலையில் உள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு, மீண்டும் கொட்டாவ நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த குழுவினரே இந்தப் பஸ்ஸில் பயணித்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்தபோது, ​​அந்த பஸ்ஸில் சுமார் 41 மாணவர்கள், 14 தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 06 பெற்றோர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, பஸ்ஸின் 40 வயதுடைய சாரதி மற்றும் 21 வயதுடைய நடத்துநர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.