தலைப்புச் செய்திகள்

டி.என்.ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரத்ன தேரர், இரத்த மாதிரியை வழங்கினார்

சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், டி.என்.ஏ பரிசோதனைக்காக இன்று (16) அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் இரத்த மாதிரியை வழங்கினார்.

அனுராதபுரத்தின் பிரதம நீதிபதி வெள்ளிக்கிழமை (12) அன்று பிறப்பித்த உத்தரவின்படி, நிட்டம்புவ பொலிஸாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இந்த இரத்த மாதிரி பெறப்பட்டது.

இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுரம் பிரதம நீதவான் ஜூன் 16 அன்று தேரருக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், பரிசோதனை முடிந்தவுடன் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

முந்தைய நீதிமன்ற உத்தரவின் பேரில், அந்தச் சிறுமியால் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடைகள், தடயவியல் பரிசோதனைக்காக மே 04 அன்று அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆடைகளில் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் டிஎன்ஏ அல்லீல்கள் (Alleles) இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் – நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, ஒப்பீட்டு நோக்கங்களுக்காக சந்தேகத்திற்குரிய தேரரிடமிருந்து இரத்த மாதிரியைப் பெற உத்தரவு கோரியது.

சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரத்த மாதிரியானது, ஆடைகளிலிருந்து மீட்கப்பட்ட டிஎன்ஏ ஆதாரத்துடன் பொருந்துகிறதா என்பதை, இந்த டிஎன்ஏ பகுப்பாய்வு தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.